நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக தரவுகள் அவ்வவ்போது வெளியாகி வருகிறது. இதனால், இளைஞர்கள் பலர் நிரந்தர வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 10 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை சிக்கல் உச்சம் தொட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்ச்சாட்டி வருகின்றன.
இதனால், ஒரு பணியிடத்திற்கு 100 பேர் போட்டிபோடும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இப்படி, வேலைவாய்ப்பின்மை நாடு முழுவதும் தலைவிரித்தாடுவதாக இதுகுறித்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில் ஆளும் அரசு அதற்கு மறுப்பும் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் குஜராத்தில் தனியார் நிறுவனமொன்றில் 10 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு ஏராளமானோர் குவிந்ததால், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் அங்கலேஷ்வர் லார்ட்ஸ் பிளாசா ஹோட்டலில் உள்ள தெர்மாக்ஸ் நிறுவனத்தில் 10 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையறிந்த இளைஞர்கள் பலர், அந்த நிறுவன வாசலில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை வீடியோ ஒன்று காட்டுகிறது.
இந்தப் பணியிடங்களுக்காக, கட்டுக்கடங்காத இளைஞர்கள் கடந்த ஜூலை 9ஆம் தேதி குவிந்துள்ளனர். சுமார் 1800 பேர் வந்திருந்ததாக கூறப்படுகிறது. இப்படி இளைஞர்கள் முண்டியடித்து வேலைக்காகக் குவிந்ததால், அங்கு தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு வேலி உடைந்தது. என்றாலும், இந்தச் சம்பத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ வைரலான நிலையில், பயனர்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ”வெறும் 10 பணிகளாக இருந்தாலும், அந்த வேலையைப் பெறுவதற்காக இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்” என ஒரு பயனர் தெரிவித்துள்ளார். ஆனால் மற்றவர்களோ, நிறுவனம் செய்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். ”இவ்வளவு பெரிய கூட்டத்தை கையாள அந்த நிறுவனம் தயாராக இருந்திருக்க வேண்டும்” என அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
வேலைக்காக இளைஞர்கள் கூட்டம் இப்படி முண்டியடித்து வரிசையில் நிற்பது இது முதல்முறையல்ல. இதுபோன்ற வீடியோக்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்த வீடியோவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஷேர் செய்து, நாட்டின் வேலைவாய்ப்பின் நிலை இதுதான் என்பதுபோல் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாத இறுதியில் கனடாவில் காபி ஷாப் ஒன்றில் பகுதி நேர வேலைக்காக மாணவர்கள் வரிசையில் காத்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.