17 வயதுக்கு முன்பே குழந்தை பெறுவது இயல்பானதே! மனுஸ்மிருதியை சுட்டிக்காட்டிய குஜராத் உயர்நீதிமன்றம்!

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் கருக்கலைப்பு வழக்கில், அந்தக் காலத்தில் பெண்கள் 14 மற்றும் 15 வயதில் திருமணம் செய்துகொள்வதும், 17 வயது ஆவதற்குள் குழந்தை பெற்றுக்கொள்வதும் இயல்பானதுதான் என குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறுமி வழக்கில் நீதிமன்றம் கருத்து
சிறுமி வழக்கில் நீதிமன்றம் கருத்துtwitter
Published on

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர், அவருடைய கருவைக் கலைக்க அனுமதிகோரி குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடினர். அந்தச் சிறுமி, தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அதாவது, சிறுமிக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரசவம் நடக்கலாம் என மருத்துவர்கள் கூறுவதால் வழக்கை முன்கூட்டியே விசாரிக்கமாறு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீர் தவே அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி சமீர் தவே, "நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். ஆனால் உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா அல்லது பாட்டியிடம் கேளுங்கள். அப்போதெல்லாம் திருமணம் செய்ய அதிகபட்ச வயதே 14-15 வயதுதான். 17 வயதிற்கு முன்பே குழந்தை பிறந்துவிடும். ஆண்களுக்கு முன்பே பெண்கள் முதிர்ச்சியடைகிறார்கள். 4-5 மாதங்கள் என்பதெல்லாம் பெரிய வித்தியாசம் இல்லை. மனுஸ்மிருதியில் இதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இதை ஒருமுறை படியுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தச் சிறுமியின் கரு, 7 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியுமா என்பது குறித்தும் தனது அறையில் மருத்துவர்களுடன் ஆலோசித்ததாக நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து, வழக்கின் சூழலை கருத்தில்கொண்டு, ராஜ்கோட் மருத்துவமனையின் மருத்துவர் அந்த சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனையை நடத்த உத்தரவிட்டார். மேலும், அந்த சிறுமிக்கு ஆசிஃபிகேஷன் பரிசோதனையை நடத்துமாறும், மனநல மருத்துவரிடம் பரிசோதனை செய்து அந்த அறிக்கையை பெறுமாறும் டாக்டர்கள் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

”இந்தச் சோதனைகளை நடத்தி, அதன் முடிவுகளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். கர்ப்பத்தை மருத்துவரீதியாகக் கலைப்பது நல்லதுதானா என்பது குறித்து மருத்துவர்கள் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.. மருத்துவரீதியாக கரு எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் தேவை" என்று கூறி வழக்கின் விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும், "தாய் அல்லது கருவில் ஏதேனும் கடுமையான நோய் இருந்தால், இந்த கோரிக்கையை நிச்சயம் பரிசீலனை செய்யும். அதேநேரம், இருவரும் நலமாக இருந்தால் கருவை கலைக்க அனுமதிப்பது கடினம்” என்று தெரிவித்தது. தொடர்ந்து, கருவை கலைக்க உத்தரவிட்டாலும், அந்தச் செயல்முறையில் 7 மாத கரு உயிருடன் பிறக்கும் சாத்தியம் குறித்தும் நீதிமன்றம் கவலை தெரிவித்ததுடன், தத்து கொடுக்கும் வழிகள் குறித்தும் பரிசீலனை செய்யமாறும் சிறுமியின் தந்தை தரப்பிற்கு நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

மருத்துவச் சட்டத்தின்படி, கருக்கலைப்புக்கான உச்சவரம்பு 24 வாரங்கள் என்பதும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கர்ப்பத்தால் பெண்ணின் உயிருக்கு அல்லது மன ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என கருதினால் கரு கலைக்க அனுமதி தரப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில், குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

”இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா?

குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஓர் வழக்கு.

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 17 வயது பெண்ணின் கருவை கலைக்க அனுமதி கோரி அவரது பெற்றோர் முறையிடுகின்றனர். அந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீர் தவே, ‘‘ அந்தக் காலத்தில் பெண்கள் 14&15 வயதில் திருமணம் செய்து கொள்வதும், 17 வயது ஆவதற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதும் இயல்பானது தான். வேண்டுமானால் மனுஸ்மிர்தி நூலை படித்துப் பார்த்து இதை உறுதி செய்து கொள்ளுங்கள்’’ என்று கூறியிருக்கிறார்.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்னொரு வழக்கு...

திருமணம் செய்வதாகக் கூறி தம்முடன் பழகி, ஏமாற்றிய காதலனுடன் திருமணம் செய்து வைக்க ஆணையிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்,‘‘ அந்த பெண்ணுக்கு 'மாங்கல்ய பாக்கியம் இல்லை' என்பதால் அவரை திருமணம் செய்ய முடியாது’’ என்று கூறுகிறார். அதைக்கேட்ட நீதிபதி பிரிஜ்ராஜ் சிங், அப்படியா? என்று பதறியதுடன், அவரது ஜாதகத்தை ஆராயந்து அந்தப் பெண்ணுக்கு மாங்கல்யா பாக்கியம் இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி லக்னோ பல்கலைக் கழகத்தின் ஜோதிடத்துறைக்கு ஆணையிட்டுள்ளார். இப்போது சொல்லுங்கள்....

இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா?’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com