அன்று லெட்டர் பேட் கட்சி.. இன்று தேசியக் கட்சி - குஜராத்தில் கால்தடம் பதித்த ஆம் ஆத்மி!

அன்று லெட்டர் பேட் கட்சி.. இன்று தேசியக் கட்சி - குஜராத்தில் கால்தடம் பதித்த ஆம் ஆத்மி!
அன்று லெட்டர் பேட் கட்சி.. இன்று தேசியக் கட்சி - குஜராத்தில் கால்தடம் பதித்த ஆம் ஆத்மி!
Published on

ஆம் ஆத்மி தேசியக் கட்சியாக மாறியுள்ளதன் மூலம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாபெரும் வெற்றி பெற்ற பாஜக.. படுவீழ்ச்சியை சந்தித்த காங்கிரஸ்!

குஜராத்தில் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவைப்படும் நிலையில் இரவு 08:30 மணி நிலவரப்படி பாஜக 154 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு இரண்டு இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால், அக்கட்சி மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. கடந்த தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தற்போது 17 தொகுதிகளில் மட்டுமே வென்று படுவீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.

குஜராத்தில் வலுவாக கால்தடம் பதித்த ஆம் ஆத்மி

முதல்முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே டெல்லி, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் காலூன்றிய ஆம் ஆத்மி தற்போது குஜராத்திலும் கால்பதித்துள்ளது. மேலும் அக்கட்சி தேசியக் கட்சியாகவும் மாறியுள்ளது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், '10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி ஒரு சிறிய கட்சி; தற்போது இது தேசிய கட்சி' என குறிப்பிட்டுள்ளார்.

12.9 சதவீதம் வாக்குகள் பெற்று அசத்திய ஆம் ஆத்மி

பொதுவாக, குறைந்தது நான்கு மாநிலங்களில் தலா 6 சதவீத வாக்குகள் பெறும் கட்சி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படும். அந்த வகையில், ஏற்கனவே டெல்லி, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற ஆம் ஆத்மி கட்சி, தற்போது குஜராத் தேர்தலில் 12.9 சதவீத வாக்குகள் பெற்றதன் மூலம் 'தேசியக் கட்சி' அந்தஸ்தை வசப்படுத்தியுள்ளது. 07.45 மணி நிலவரப்படி அங்கு 5 தொகுதிகளை வென்றுள்ளதோடு, 12.9 சதவீத வாக்குகளையும் பெற்றது. 41,11,860 பேர் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

10 வருடத்தில் அசுர வளர்ச்சி

தொடங்கப்பட்ட 10 வருடங்களில் டெல்லி, பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சி, தேசியக் கட்சியாக அவதாரம் என அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி. காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக உள்ளன. தற்போது இந்த வரிசையில் ஆம் ஆத்மியும் இணைந்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்துவரும் சூழலில் அக்கட்சியின் சரிவை தனதாக்கிக் கொள்வதற்கான முயற்சிகள் ஈடுபட்டு வருகிறது ஆம் ஆத்மி. அந்த முயற்சி பெரிய அளவில் பலனளித்தும் வருகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆம் ஆத்மி தேசியக் கட்சியாக மாறியுள்ளதன் மூலம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸின் பின்னடைவுக்கு காரணமான ஆம் ஆத்மி!

குஜராத் மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக 52 சதவீதம் வாக்குகளை குவித்து வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த முறை 41 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த காங்கிரஸ் இந்த முறை வெறும் 27 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. காங்கிரஸ் இழந்த அந்த வாக்குகளை கைப்பற்றியது வேறுயாருமில்லை ஆம் ஆத்மிதான். ஆம் ஆத்மி 12.9 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.

வாக்குறுதிகள் தான் காரணமா?

ஆம் ஆத்மிக்கு இந்த அளவிற்கு வாக்குகள் குவிய காரணம் அந்த கட்சி கொடுத்த வாக்குறுதிகளும், அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரசாரமும். கல்வி, மின்சாரம் போன்ற பல விஷயங்களை ஆம் ஆம்தி பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்தது. ஆம் ஆத்மியை பார்த்து பாஜகவும் கூட பல வாக்குறுதிகளை கொடுத்தது குறிப்பிடத்தக்கது

தவற விடாதீர்: ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்.. இமாச்சலில் பாஜக தோல்வியடைய 3 முக்கிய காரணங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com