இடுகாடு, தகனம் பற்றியெல்லாம் நினைத்தாலே பலரும் அச்சப்பட்டு அவ்விடத்தை விரைவில் கடந்துவிட வேண்டும் என்றே எண்ணுவார்கள். ஆனால் குஜாரத்தில் உள்ள திசா பகுதியில் உள்ள இடுகாடு ஒன்றில் பிறந்தநாள் விழா, திருமணத்துக்கு முந்தைய ஃபோட்டோ ஷூட் போன்ற நிகழ்வுகளையெல்லாம் நடத்துகிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது குஜாரத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள திசா என்ற பகுதியில் 12,000 சதுர அடி பரப்பளவில் 5 முதல் 7 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது இடுகாடு ஒன்று. இதனை இடுகாடு என்று சொல்லப்பட்டாலும் ஏதோ பொழுதுபோக்கு பூங்கா போன்றுதான் இந்த கட்டமைப்பு இருக்குமாம்.
ஏனெனில், இடுகாடு என்றதுமே ஊருக்கு ஒதுக்கு புறத்தில் ஆள் அரவமற்ற இடத்தில் ஏதோ ஒரு மூலையிலேயே இருக்கும். ஆனால், இந்த திசா பகுதியில் உள்ள இடுகாட்டை அன்புக்குரியவர்களை தகனம் செய்வதற்கான நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த இடுகாட்டில் பணிகள் 80 சதவிகிதம் மட்டுமே நிறைந்திருந்தாலும் அதன் தனித்துவமான அழகான கட்டமைப்பும் அம்சங்களும் காண்போருக்கு பிரபலமான இடமாகவே மாறியிருக்கிறது. பனாஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த சுடுகாட்டிற்குள் செல்வதற்காக மிகப்பெரிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு நட்சத்திர விடுதிக்கான வாயிலை போல உள்ளது.
இடுகாட்டுக்குள் தகனம் செய்வதற்கான பிரார்த்தனை கூடம், முதியோருக்கான நூலகம், ஒரு பெரிய தோட்டம், குழந்தைகள் விளையாடும் பகுதி, நினைவு வளாகம், குளியலறைகள், கழிவறைகள் உள்ளிட்ட பிற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதுபோக கிராமப்புற மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையிலான ஓவியங்களும், கிணறு, மழைநீர் சேமிப்புக்கான வசதிகள் உள்ளன.
இடுகாட்டு பகுதிகள் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று முழுக்க முழுக்க தகனம் செய்வதற்கும் மற்றொன்று பிக்னிக் ஸ்பாட் உள்ளிட்ட பிற நிகழ்வுகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இங்கு தகனம் செய்ய வெறும் ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறப்படுகிறதாம்.
மொத்தத்தில் இந்த திசா தகன மையம் வழக்கமான இடுகாடுகளுக்கு சவால் விடும் அளவுக்கு கட்டப்பட்டிருக்கிறது. மிகவும் நேசித்தவரின் இழப்பால் துக்கப்படாமல் இருப்பவர்களுக்கு இந்த இடுகாட்டின் வடிவமைப்புஒரு ஆறுதல் இடமாக மாற்ற கூடுதல் தூரம் சென்றிருப்பது பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று கொடுத்திருக்கிறது.