குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டம் பலான்பூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ராஜஸ்தானை சேர்ந்த சாமர்சிங் ராஜ் புரோகித் என்ற வழக்கறிஞர் தங்கியிருந்தார். இவர் தங்கியிருந்த அறையில் 1.5 கிலோ அபின் வைத்திருந்ததாக போலீசார் அவரை கைதுசெய்தனர். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தின்போது பனஸ்கந்தா மாவட்ட எஸ்.பியாக இருந்தவர், சஞ்சீவ் பட். இவருக்கும் வழக்கறிஞர் சாமர்சிங்கிற்கும் வணிகச் சொத்து சம்பந்தமாகப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் அவரைப் பழிவாங்குவதற்காக போலீசார் அவர்மீது பொய்யான வழக்கைத் தயார் செய்தது பின்னர் நீதிமன்ற விசாரணையின்போது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட வழக்கறிஞர், அதன்பின்னர், தன்னை கடத்திச் சென்று அடைத்து வைத்ததாக சஞ்சீவ் பட் உள்பட சிலர்மீது குற்றம்சாட்டி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான இறுதி விசாரணைக்குப் பின் கடந்த மார்ச் 27ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
அதில் சஞ்சீவ் பட்டுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே 1990ஆம் ஆண்டு ஜாம்நகர் மாவட்டத்தில் கூடுதல் எஸ்பியாக சஞ்சீவ் பட் இருந்தபோது, போலீஸ் காவலில் இருந்தவர் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அதில் தற்போது சஞ்சீவ் பட் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில், ஆயுள் தண்டனை முடிந்தபிறகு தற்போது விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக சஞ்சீவ் பட்டின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க உறுதியான ஆதாரங்கள் இல்லை என அவரும், அவரது மனைவியும் தெரிவித்துள்ளனர். முன்னதாக, போலீஸ் காவலில் இருந்தவர் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு எதிராக சஞ்சீவ் பட் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். கடந்த ஜனவரி மாதம் இதுதொடர்பான தீர்ப்பின்போது, அவரது தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட சஞ்சீவ் பட், கடந்த 2015ஆம் ஆண்டு காவல் துறையில் இருந்து நீக்கப்பட்டதுடன், 2018 முதல் சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.