குஜராத்தில் மார்பளவு வெள்ள நீரில், இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்தபடி பத்திரமாக தூக்கிச் செல்லும் போலீசாரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழைக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக மீட்புப் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. இதுவரை கிட்டத்தட்ட 6,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மார்பளவு வெள்ள நீரில், இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்தபடி பத்திரமாக போலீசார் ஒருவர் தூக்கிச் செல்கிறார். போலீஸ் கான்ஸ்டபிளான பிருத்விராஜ் சிங் ஜடேஜா, கிட்டத்தட்ட 1.5 கிலோ தூரம் வெள்ள நீரில் இரண்டு குழந்தைகளையும் தூக்கிச் செல்கிறார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. இந்த வீடியோவை பார்த்த பலரும் போலீசாரின் அர்ப்பணிப்பு உணர்வையும், துணிச்சலையும் பாராட்டி வருகின்றனர்.
இந்த வீடியோவை கண்ட குஜராத் முதலமைச்சரான விஜய் ரூபானி, பிருத்விராஜ் சிங் ஜடேஜாவின் தைரியத்தை வெகுவாக ட்விட்டரில் பாராட்டியுள்ளார். அதில், “இக்கட்டான சூழ்நிலையிலும் உங்கள் பணியின் அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். கடின உழைப்பு, தீர்க்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஜடேஜா முன் உதாரணமாக இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமணனும் போலீசாரின் பணியை பாராட்டியுள்ளார். அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்திற்கு முன் உதாரணமாக போலீசார் பிருத்விராஜ் சிங் ஜடேஜா உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தச் செயலுக்கு தலைவணங்குகிறேன் எனவும் லட்சுமணன் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்வதோடு, போலீசாரின் உழைப்பை பாராட்டி வருகின்றனர்.