குஜராத் முதலமைச்சர் பதவியிலிருந்து விஜய் ரூபானி திடீரென ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய முதலமைச்சர் இன்று தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது
தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத்திடம் அளித்தபின் விஜய் ரூபானி அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கட்சித்தலைமை மீது தனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை என தெரிவித்தார். முதல்வர் பதவியில் இருப்பவர் மாற்றப்படுவது தங்கள் கட்சியில் இயல்பான ஒன்று என்று தெரிவித்த ரூபானி, தனது பதவி விலகலுக்கு என்ன காரணம் என்பதை தெரிவிக்கவில்லை. குஜராத்தில் அடுத்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ராஜினாமா முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
துணை முதல்வராக உள்ள நிதின் பட்டேல் முதலமைச்சர் ஆவாரா அல்லது வேறு ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர் ராஜினாமா செய்வது இது 3ஆவது முறை. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் உத்தராகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்தும் அண்மையில் பதவி விலகியிருந்தனர்.