குஜராத்தில், கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது, வன்முறையாளர்கள் சிலரால் பில்கிஸ் பானு என்ற 21 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்நேரத்தில் அவர் 5 மாத கர்ப்பிணியாகவும் இருந்தார். அன்றைய தினம் பில்கிஸ் பானு வன்கொடுமை மட்டுமன்றி, அவரது 3 வயது மகள் உட்பட அவர் குடும்பத்தினர் 14 பேர் படுகொலையும் செய்யப்பட்டிருந்தனர்.
இதுதொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பின் அதனை மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. அப்படி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த 11 குற்றவாளிகளும், கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது விடுதலை செய்யப்பட்டனர்.
‘அரசு அமைத்த சிறப்புக் குழுவின் பரிந்துரையின்படி நன்னடத்தை அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்'
எனக்கூறி 11 பேரை விடுதலை செய்தது குஜராத் அரசு
இவர்களுடைய விடுதலைக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக் காலம் முடிவதற்குள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். உடன், ‘குற்றவாளிகளை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக குஜராத் அரசு முடிவை எடுக்கலாம்’ என மே 2022-ல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராகவும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, 11 பேரின் விடுதலைக்கான அடிப்படை காரணங்களைக் கேட்ட உச்சநீதிமன்றம், அதற்கான உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு குஜராத் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு கடந்த மாத இறுதியில் விசாரணைக்கு வந்தபோது, 11 பேர் விடுதலை ஆவணங்களைத் தாக்கல் செய்ய குஜராத் மற்றும் மத்திய அரசுகள் மறுப்பு தெரிவித்தன.
மேலும் இதுதொடர்பாக மறுசீராய்வு மனு ஒன்றையும் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது. இதற்கு அப்போதே அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “இன்று பில்கிஸ் பானு வழக்கில் நடந்தது நாளை வேறு ஒருவருக்கு நடக்கலாம். அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம். குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட காரணத்தை அரசு கூறாவிட்டால் உச்சநீதிமன்றமே ஒரு முடிவுக்கு வர நேரிடும்” எனக் கடுமையாக எச்சரித்ததுடன், மே 2ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
நீதிமன்ற அறிவுறுத்தலின்படி இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசும் குஜராத் அரசும் ஒப்புக் கொண்டன. மேலும் குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்தது தொடர்பான ஆவணங்களுக்கு உரிமை கோர மாட்டோம் என்றும் அவை தெரிவித்தன. இதையடுத்து, இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் மே 9ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து ஒத்திவைத்தது.
இருப்பினும் நேற்றுதான் இறுதி விசாரணை நடைபெறும் என சொல்லப்பட்ட நிலையில், குற்றத்தில் ஈடுபட்டு விடுதலையானவர்களின் வழக்கறிஞர்கள் சாக்குபோக்கு கோரி கால அவகாசம் கேட்டதால், அவர்களிடம் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் வழக்கின் இடையேவும் குறிக்கிட்டு “ஜூன் 16-ம் தேதி நான் ஓய்வு பெறுகிறேன். மே 19க்குப்பின் கோடை விடுமுறை தொடங்குகிறது என்பதால், இந்த அமர்வு இவ்வழக்கை விசாரிப்பதை தடுக்க முயல்கிறீர்களென தெளிவாக தெரிகிறது. இது எனக்கு சரியென படவில்லை. நீங்கள் நீதிமன்றத்தின் அதிகாரிகள். ஒருவழக்கில் நீங்கள் வெற்றிபெறலாம் அல்லது தோல்வியடையலாம். ஆனால் நீதிமன்றத்துக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமைகளை மறக்கவேண்டாம்” என்று கடுமையாக சாடினார்.