காதல் என்பது ஓர் உணர்வுப்பூர்வமான விஷயம். அது ஒரு மனிதனுக்குள் வந்துவிட்டால் பசி, தூக்கம், மகிழ்ச்சி, மாற்றம் என எல்லா வகையிலும் அவனுடைய உணர்வுகளை உணர முடிகிறது. அதேநேரத்தில், அவன் அதில் தோல்வியைச் சந்தித்தால் மன அழுத்தமே சில நேரங்களில் அவனைக் கொன்றுவிடுகிறது. இப்படியான ஒரு சம்பவம் மாடலுக்குப் பெயர்போன குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அதிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் காதலர்களாக இருந்து உயிரைவிடுத்திருப்பதுதான் மிகவும் கொடூரமான செய்தியாக இருக்கிறது.
குஜராத்தின் ஜலான் மாவட்டம் தேவகாவ்ன் கிராமத்தைச் சேர்ந்தவர் நரேந்திர வர்மா (19). இவருடைய உறவினர் புஷ்பேந்திர வர்மா (18). அதாவது, புஷ்பேந்திராவின் தந்தை நரேந்திராவின் தாய் மாமா ஆவார். இளைஞர்கள் இருவரும் பாதுகாவலர்களாகப் பணிபுரிந்து வந்துள்ளனர். இதே மாவட்டம் கைந்தோலி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலம் ஷர்மா (20). இவருடைய சகோதரி ரோஷினி வர்மா (18). அதாது நீலம் மற்றும் ரோஷினி ஆகியோரின் தந்தையர் உடன்பிறந்த சகோதரகள் ஆவர். பெண்கள் இருவரும் அல்தானில் உள்ள குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்துள்ளனர்.
இந்த இரு குடும்பத்தினரும் நன்கு அறிமுகமாகி உள்ளனர். அந்த வழியில், நரேந்திரா - நீலம், புஷ்பேந்திரா - ரோஷினி ஆகியோர் காதலில் விழுந்துள்ளனர். இந்த நிலையில், நீலமும் ரோஷினியும் தங்கள் காதலர்களை அணுகி, திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.
இந்தச் சூழலில், ’தமக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை ஒன்று இருக்கிறது; அதனால் உன்னைத் திருமணம் செய்ய முடியாது’ என நீலத்திடம் நரேந்திரா கூறியிருக்கிறார். அதுபோல் புஷ்பேந்திரா, ‘நம்முடைய காதலுக்குப் என் பெற்றோர் சம்மதித்தால்தான் உன்னைத் திருமணம் செய்துகொள்வேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
காதலர்களின் இந்தப் பதில்களைக் கேட்ட அந்த இரண்டு பெண்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதிலிருந்து மீள வழிதெரியாத அவர்கள், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி ஆள் நடமாட்டமில்லாத ஓர் இடத்தில் மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்கள்.
காதலிகளின் முடிவால் கடும் அதிர்ச்சியடைந்த நரேந்திராவும் புஷ்பேந்திராவும் நேற்று (பிப்.21) தங்கள் காதலிகள் தூக்கில் தொங்கிய அதே மரத்தில் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டார்கள். ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த உறவினர்கள் காதலில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வாகாது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.