குஜராத்தில் 25 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை கடும் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டது. சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள துடாபூர் என்ற கிராமத்தில் நேற்றிரவு கூலித் தொழிலாளி தம்பதியின் 2 வயது மகனான சிவம், அருகிலுள்ள பண்ணை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் அவன் தவறி விழுந்தான்.
இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் உள்ளூர் பேரிடர் மேலாண்மை மற்றும் அகமதாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினரை வரவழைத்தனர். இதனைத் தொடர்ந்து ராணுவம் மற்றும் காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
மீட்புப்பணிகள் 40 நிமிடங்களில் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அந்தக் குழந்தை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.