’தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணி|பெங்களூரு தொழிலதிபர் வீட்டில் ரெய்டு நடத்திய அதிகாரிகள்.. 4 பேர் கைது
நடிகர் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில், அவரும் அவரது நண்பர்களும் சிபிஐ மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகளாக போலியாக நடித்து, அரசை ஏமாற்றி கருப்புப் பணம் வைத்திருப்பவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்துவார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மண்டல ஜிஎஸ்டி அலுவலகத்தில் அபிஷேக், மனோஜ் சைனி, நாகேஷ் பாபு, சோனாலி ஷாஹி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து, தொழிலதிபர் ஒருவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் போலியான சோதனையை நடத்தி இருக்கின்றனர்.
இந்தச் சோதனையின் முடிவில் ரூ.1.5 கோடி பணமும் ஏமாற்றி வசூலிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக எழுந்த புகாரின்பேரில் பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், பெங்களூரு மண்டலப் பிரிவின் (மத்திய ஜிஎஸ்டி) ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஜெனரல் அதிகாரிகள் அனுமதியின்றி சோதனை நடத்தியதை போலீஸார் கண்டறிந்தனர்.
இந்த வழக்கில் பெங்களூரு மண்டலத்தின் மத்திய வரி அதிகாரியின் கண்காணிப்பாளர், ஜிஎஸ்டி பெங்களூரு மண்டலத்தைச் சேர்ந்த இரண்டு மூத்த புலனாய்வு அதிகாரிகள் மற்றும் பெங்களூரு மண்டல ஜிஎஸ்டியைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரி உட்பட மேற்சொன்ன நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து, அனுமதியின்றி பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு (சிசிபி) மாற்றப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.