நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்துள்ளது.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி இருவரும் ஜி.எஸ்.டி. வரி முறையை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஜி.எஸ்.டி. உருவாக்கத்தில் அனைத்து மாநிலங்களின் பங்கு உள்ளதாகவும், ஜி.எஸ்.டி புதிய இந்தியாவை உருவாக்கும் என்றும் கூறினார். குறுகிய அரசியல் நோக்கத்தில் இருந்து விடுபட ஜி.எஸ்.டி உதவும் என்றும், ஜி.எஸ்.டி. ஏழைகளுக்கு தேவையற்ற சுமைகளை கொடுக்காது என்றும் அருண் ஜெட்லி குறிப்பிட்டார். இதன் பிறகு சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஜி.எஸ்.டி. மூலம் புதிய எதிர்காலம் தொடங்கியிருப்பதாகவும், புதிய பரிமாணத்தை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார். அதன் பிறகு, அவரும், பிரதமரும் சேர்ந்து மணியடித்து, வரிவிதிப்பு முறையை அறிமுகம் செய்து வைத்தனர்.