ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் உடன் கலப்பதற்காக எரிபொருள் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எத்தனால் மீதான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவிகிதத்திலிருந்து ஐந்து சதவிகிதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டது.
பெட்ரோல் மற்றும் டீசலுடன் பிளன்டிங் முறையில் எத்தனால் சேர்க்கப்படுகிறது. கச்சா எண்ணெயின் இறக்குமதி மற்றும் பயன்பாட்டை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைகள் கரும்பு கழிவுகளில் இருந்து எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகள், இந்த எரிபொருளை எரிசக்தி நிறுவனங்களின் ரீபைனரி தொழிற்சாலைகளுக்கு அனுப்புகின்றன. அப்படி அனுப்பப்படும் எத்தனாலுக்கு இதுவரை 18 சதவிகிதம் வரி வசூலிக்கப்பட்டது. இனி இந்த வரி ஐந்து சதவீதமாக குறைக்கப்படும் என இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஆன்லைன் கேம்பிளிங் மற்றும் பான் மசாலா மீதான ஜிஎஸ்டி வரி தொடர்பான முடிவுகள் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் சூதாட்டங்கள் நடத்தும் நிறுவனங்கள் மீதான வரியை 28% ஆக உயர்த்த வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன. ஆன்லைன் சூதாட்டங்களை நடத்தி வரும் நிறுவனங்கள் மீதான வரி தற்போது 18 சதவீதமாக இருந்து வருகிறது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இத்தகைய ஆன்லைன் சூதாட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து பரிந்துரைகள் அளிப்பதற்காக மேகாலயா முதல்வர் சங்மா தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமீபத்தில் தனது அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அளித்தது.
இந்தப் பரிந்துரைகள் மாநிலங்களின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மாநிலங்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பிறகு ஜி.எஸ்.டி. கவுன்சில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதேபோல் பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் மீதான வரியை உயர்த்துவதற்கான பரிந்துரை தொடர்பாக மாநிலங்களிடமிருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான ஆலோசனைகளை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் இன்றைய ஆலோசனை காணொளி மூலமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிர்மலா சீதாராமன், அமைச்சக இணை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் டெல்லியில் இருந்து ஆலோசனையில் கலந்து கொண்டனர். மாநில நிதி அமைச்சர்கள் தங்களுடைய மாநிலங்களிலிருந்து காணொளி மூலமாக ஆலோசனையில் பங்கேற்றனர்.
அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எப்போது நடத்தப்படும் என முடிவு செய்யப்படவில்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அடுத்தக் கூட்டத்தில் காணொளி மூலம் இணையாமல் மாநில நிதி அமைச்சர்கள் நேரடியாக கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகர் நகரில் ஜூன் மாதம் நடைபெற்றது. ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பான் மசாலா போன்ற விவகாரங்களில் அமைச்சர்கள் குழுக்கள் பரிந்துரைகளை தாக்கல் செய்ய காலதாமதம் ஆனதால், 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எதிர்பார்த்த நேரத்தில் நடைபெறவில்லை. இன்றைய கூட்டத்தில் பல்வேறு விதிமுறைகளை மாற்றியமைத்து, ஜிஎஸ்டி வரியை வசூல் செய்வதை எளிதாக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு மற்றும் தொழிலதிபர்கள் இடையே நீடித்து வந்த பல்வேறு குழப்பங்களை தீர்த்து வைக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு எஸ்யூவி என அழைக்கப்படும் கார் வகைகளை அடையாளம் காட்ட தேவையான அம்சங்கள் என்ன என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதேபோல் போலியான ஜிஎஸ்டி ரசீதுகளை வழங்குவது தவிர, பல்வேறு ஜிஎஸ்டி தொடர்பான குற்றங்களுக்கு கைது மற்றும் சிறை தண்டனை போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து, அபராதம் விதிப்பது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க கூடிய எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
- கணபதி சுப்ரமணியம்