திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர் (22) கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல்நலம் தேறினார். பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக கெளசல்யா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் சாதிய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் அம்ருதா என்ற பெண்ணின் கண்முன்னே அவரது கணவர் ப்ரனய் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அம்ருதாவின் தந்தை, சித்தப்பா மற்றும் சிலரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ப்ரனயின் வீட்டிலுள்ள அம்ருதாவை நேரில் சென்று கெளசல்யா சந்தித்தார். அவரிடம் பேசிய கெளசல்யா, தைரியமாக இருக்க வேண்டும் என கூறினார். அத்துடன் சங்கர் படுகொலை செய்யப்பட்ட வீடியோவை காண்பித்து, தனது வாழ்வில் நேர்ந்ததைக் கூறினார்.
அதற்கு அம்ருதா, “எத்தனை பேரை தான் தண்டிப்பது” எனக் கேட்டார். கெளசல்யா தன்னுடன் தனது வழக்கறிஞரையும் அழைத்து வந்திருந்தார். அம்ருதாவிடம் பேசிய வழக்கறிஞர், சங்கர் கொலை வழக்கில் 58 முறை தனது பெற்றோர் ஜாமீன் மனுவை கெளசல்யா எதிர்த்ததாகக் கூறினார்.
பின்னர் ‘உங்கள் கணவர் கொலை செய்யப்பட்டதற்கு சாதிதான் காரணமா?” என அம்ருதா கேட்டார். “சாதி மட்டும்தான் காரணம்” என கெளசல்யா கூறினார். பின்னர் பேசிய அம்ருதா, “ப்ரனய் கொலைக்கு காரணமான 7 பேரையும் தூக்கில் போட வேண்டும். எனது சித்தப்பா வெளியே வந்தால் எனக்கும், எனது குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்” என்றார். இதைக்கேட்ட கெளசல்யா, “நீங்கள் நடந்ததை எல்லாம் நீதிமன்றத்தில் கூறுங்கள், அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்” என்றார்.
(Courtesy : The News Minute)