செய்தியாளர்: மகேஷ்வரன்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவால் ஏராளமான மக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தனர். இதில், 420-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 100க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இதில் பாதிக்கப்பட்ட சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மேப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி கட்டடங்களில் தற்காலிக முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனால் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 28 நாட்களாக பள்ளிகள் செயல்படாமல் மாணவர்கள் பாதிப்படைந்தனர்.
இந்த நிலையில் முகாம்களில் தங்கி இருந்தவர்களுக்கு வாடகை வீடுகளில் குடியேறுவதற்கான வசதிகளை கேரள அரசு ஏற்படுத்தி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து முகாம்களில் தங்கி இருந்த அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். இதனை அடுத்து 28 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் செயல்படத் தொடங்கி இருக்கிறது. இதனால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள்.