வடக்கு காஷ்மீரின் உரி பகுதியைச் சேர்ந்த மேல்நிலை பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கென தனி வெப்சைட்டை உருவாக்கியுள்ளார்.
கொரோனா பரவலினால் நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் மூலமாக செல்போன் வழியே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றனர். சில ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்துகின்றனர். இப்படி பள்ளிப் படிப்பு என்பது கொரோனாவால் முற்றிலும் மாறிபோயுள்ளது. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பதும் தற்போது விடைதெரியாத கேள்வியாகவே உள்ளது.
இந்நிலையில் வடக்கு காஷ்மீரின் உரி பகுதியைச் சேர்ந்த மேல்நிலை பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கென தனி வெப்சைட்டை உருவாக்கியுள்ளார். மேலும் ஆண்ட்ராய்ட் செயலி ஒன்றையும் உருவாக்கியுள்ளார். அய்சாஷ் சேக் என்ற ஆசிரியர் இந்த வெப்சைட்டை 3 மாதங்களில் உருவாக்கியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர் இதனை நான் 15 நாட்களில் உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால் 3 மாதங்கள் ஆகிவிட்டன என தெரிவித்துள்ளார்.
இந்த வெப்சைட் மட்டுமின்று செயலியும் மாணவர்களுக்கு உதவியாக இருப்பதாகவும், பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் இதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வெப்சைட்டில் மாணவர் சேர்க்கைக்கான வசதியும் உள்ளது. காஷ்மீரில் 2ஜி சேவை மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில் ஆசிரியர் அந்த வெப்சைட்டை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.