’புளூ வேல்’ இணைய விளையாட்டின் இணைப்புகளை இணையத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
’புளூ வேல் சேலஞ்ச்’ என்பது இணைய விளையாட்டு. நீங்கள் 50 சாவால்களை எதிர்கொண்டு செய்து காட்ட வேண்டும். சவாலை செய்து முடிப்பதை வீடியோவாகவோ அல்லது படமாகவோ எடுத்து அந்தக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். இறுதியான சவாலை செய்துவிட்டால் நீங்கள் வெற்றியாளார். ஆனால் அந்த இறுதி சவால், தற்கொலை என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.
ரஷ்யாவில் இருந்து வந்த இந்த விளையாட்டு, இணையம் மூலம் சுமார் 130 சிறுவர்களை தற்கொலைக்குத் தூண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த விளையாட்டு இப்போது ஊடுருவி இருக்கிறது. இதற்கு 2 மாணவர்கள் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக இதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், கூகுள், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், மைக்ரோசாப்ட், யாகூ ஆகிய இணைய நிறுவனங்களுக்கு தனது அமைச்சகத்தின் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஆபத்தான புளுவேல் இணைய விளையாட்டின் லிங்குகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.