செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
முடாவில் சட்டவிரோதமாக மனை பெற்றது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கும்படி, சமூக ஆர்வலர் ஆபிரஹாம் என்பவர் அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் செய்திருந்தார். அதை விசாரித்த ஆளுநரும், கர்நாடக முதல்வரிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளித்தார்.
இது குறித்து கேள்வி எழுப்பி உயர் நீதிமன்றத்தில், முதல்வர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், விசாரணையை எதிர்கொள்ளும்படி உத்தரவிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான், “இந்த தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டதாகும். இது அரசியல் தீர்ப்பு” என கூறினார். அவரது பேச்சு அம்மாநில அரசியலில், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால் அதிருப்தியடைந்த சமூக ஆர்வலர் ஆபிரஹாம், “ஜமீர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, அவருக்கு பாடம் கற்பிப்பேன்” என கூறினார். மேலும் இதுகுறித்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம், புகார் அளித்திருந்தார். இதை தீவிரமாக கருதிய ஆளுநர், “நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள அமைச்சர் ஜமீர் அகமது கான் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அரசின் அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார்.