கேரள மாநில ஆளுநர் ஆரிப்முகமது கான் இருமுடி கட்டி வந்து சபரிமலையில் தரிசனம் செய்தார். உடன் அவரது இளையமகன் கபீர்முகமது கானும் வந்து தரிசனம் செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை பம்பை வந்த ஆளுநர் பம்பா கணபதி கோயிலில் இருமுடி கட்டினார். பின்பு, அங்கிருந்து மலைப்பாதை வழியே ஐயப்பன் கோயில் செல்ல மலை ஏறினார். அவரை சுமந்து செல்ல பம்பையில் இரண்டு 'டோலி'கள் தயார் படுத்தப்பட்டிருந்தன. ஆனால் ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற ஆளுநர் சபரிமலையில் தரிசனம் செய்தார்.
ஆளுநர் சன்னிதானம் வந்தடைந்தபோது சபரிமலை 18ம் படியில் படி பூஜை நடந்து கொண்டிருந்தது. படி பூஜை முடிந்ததும் இரவு 08.00 மணிக்கு இருமுடி கட்டோடு 18ம் படியேறிய ஆளுநர் ஆரிப்முகமது கான் ஐயப்பனை தரிசனம் செய்தார். அவருக்கு சபரிமலை தந்திரி கண்டராரு ராஜீவரு பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து மாளிகைப்புரத்தம்மன் கோயில், வாவரையும் தொழுது சன்னிதானத்தில் தங்கினார்.