உத்தரப்பிரதேசத்தில் 6 வருடங்களாக பள்ளிக்கு செல்லாமல், அதற்கான வருமானத்தை மட்டும் தவறாமல் வாங்கிய ஆசிரியர் அதிரடியாக பிடிப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பரிட்ஷித்கர் என்ற பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு பணிப்புரியும் ஆசிரியர்களில் ஒருவர்தான் சுஜாதா யாதவ். ஆனால், இவர் பல வருடங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால், ஆசிரியர் சுஜாதாவின் பாட வேளைகளில் மட்டும் பாடம் எடுக்க ஆசிரியர் இல்லாமல், மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். இந்தநிலையில், இது குறித்து அம்மாவட்ட அரசு பள்ளிகளின் தலைமை அதிகாரியான ஆஷா சவுத்ரிக்கு புகார் கடிதம் பறந்துள்ளது.
இதனையடுத்து, சுஜாதா பள்ளிக்கு வராததன் காரணம் என்ன?.. 6 வருடங்களுக்கு மேலாக பள்ளிக்கு செல்லாமல் இருந்தும், மாற்று ஆசிரியர் நியமிக்கப்படாமல் இருந்தது ஏன்? என்ற கண்ணோட்டத்தில் மூன்று கட்டமான விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டு விடுப்பு குறித்து விசாரனை மேற்கொண்டுள்ளார் மாவட்ட அரசு பள்ளிகளின் தலைமை அதிகாரியான ஆஷா சவுத்ரி.
அப்பொழுதுதான் திடுக்கிடும் தகவல் அவருக்கு கிடைத்துள்ளது.. விசாரணையில் கிடைத்த தகவலின்படி,
ஆசிரியர் சுஜாதா பள்ளியில் சேர்ந்து பணியாற்றி வந்த கடந்த 2920 நாட்களில் வெறும் 759 நாட்களுக்கு மட்டுமே பள்ளிக்கு சென்றுள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு செல்லாத நாட்களிலும் சுஜதாவிற்கு வருகை பதிவி செய்யப்பட்டுள்ளதும், அதற்கான முழு சம்பளத்தையும் பெற்றுவந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்ல, இதனை தட்டிக்கேட்க வேண்டிய இடத்தில் இருந்த அப்பள்ளியின் முதல்வரும்கூட, சுஜாதா பணிக்கு வராமல் சம்பளம் பெறுகிறார் என்பதை நன்கு அறிந்துள்ளார். ஆனால், அவரும் சுஜாதாவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், உடந்தையாக இருந்துள்ளார்.
இதனால், குற்றம் செய்த ஆசிரியர் சுஜாதா , உடந்தையாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் என இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை பாய்ந்துள்ளது, தற்போது இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, இது போன்ற பல சம்பவங்கள் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கவே, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கைப்பேசிகளில் அன்றாடம் ”லைவ் அட்டண்டன்ஸ்” என்ற முறையை அமலாக்கி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
முன்னதாக, ஒரே சமயத்தில் 12 பள்ளிகளில் பணியாற்றி பல கோடி சம்பாதித்த ஆசிரியர் ஒருவரும், இதேபோல அதிரடியாக சிக்கினார் என்பது கூடுதல் தகவல்.