சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில், ஜனவரி 23 'பராக்கிரம தினம்' ஆக இனி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளை 2021 ஜனவரி 23 முதல் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பான முறையில் கொண்டாட இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் குறித்து முடிவெடுப்பதற்கும், கொண்டாட்டங்களை மேற்பார்வையிட்டு வழிகாட்டுவதற்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நாட்டுக்கு ஆற்றியுள்ள தன்னலமற்ற சேவையையும், அவரது அணையாத விடுதலை உணர்வையும் போற்றும் வகையில், ஒவ்வொரு வருடமும் ஜனவரி 23-ஐ 'பராக்கிரம தினமாக' கொண்டாட மத்திய அரசு முடுவெடுத்துள்ளது. இதன் மூலம், நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள், நேதாஜியைப் போன்று கடினமான காலங்களில் உறுதியுடன் செயல்படுவதற்கும், நாட்டுப் பற்றை தங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்கும் ஊக்கம் பெறுவார்கள்.
ஜனவரி 23-ஐ 'பராக்கிரம தினமாக' அறிவிக்கும் அரசிதழ் அறிவிப்பும் வெளியிடப்பட்டுவிட்டது' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திக் கட்டுரை: திடீர் 'நேதாஜி பற்று'... - மேற்கு வங்கத்தில் பாஜக Vs திரிணாமுல் தீவிரமாவதன் பின்புலம்!