’முஸ்லீம்களுக்கு எதிரான அட்டூழியங்களால் கோவிலில் தாக்குதல்’ - ஐஐடி பட்டதாரி வாக்குமூலம்

’முஸ்லீம்களுக்கு எதிரான அட்டூழியங்களால் கோவிலில் தாக்குதல்’ - ஐஐடி பட்டதாரி வாக்குமூலம்
’முஸ்லீம்களுக்கு எதிரான அட்டூழியங்களால் கோவிலில் தாக்குதல்’ - ஐஐடி பட்டதாரி வாக்குமூலம்
Published on

உத்தரப் பிரதேசம் கோரக்நாத் கோவிலில் காவலர்களை அரிவாளால் துரத்திய ஐஐடி பட்டதாரி முஸ்லீம்களுக்கு எதிரான அட்டூழியங்களால் கோபமடைந்து தாக்குதல் நடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை பூசாரியாக இருக்கும் கோரக்நாத் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆயுதப்படைக் காவலர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஐஐடியில் ரசாயனப் பொறியியல் பயின்ற அஹ்மத் முர்தாசா அப்பாசி காவலர்களை கண்மூடித்தனமாக தாக்கத் துவங்கினார். இதை சற்றும் எதிர்பாராத காவலர்கள் திகைத்து நின்றனர். கையில் அரிவாளை எடுத்து அப்பாசி காவலர்களை விரட்ட, செய்வதறியாமல் காவலர்கள் ஓட்டம் பிடிக்க, கோரக்நாத் கோயில் வளாகம் இரவு வேளையில் போர்க்களமானது. சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு அப்பாசியை காவல்துறையினர் கைது செய்தனர். சம்பவத்தில் இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கோயில் வளாகத்தில் இருந்தவர்கள் பதிலுக்கு அப்பாசியை செங்கற்களால் தாக்கியதால் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். அப்பாசி அரிவாளுடன் காவலர்களை துரத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த வழக்கை உ.பி., பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரிக்கத் தொடங்கினர். இது குறித்து பேசிய அப்பாசியின் தந்தை முகமது முனீர், 2017 முதல் அப்பாசி சரியான மனநிலையில் இல்லை என்று கூறினார். அப்பாசியின் சமநிலையற்ற மனநிலை மற்றும் தனியாக வாழும் அவரது போக்கு காரணமாக அவரது திருமணம் விவாகரத்தில் முடிந்ததாக கூறினார். அகமதாபாத் உட்பட பல நகரங்களில் அப்பாசி சிகிச்சை பெற்றுள்ளார் என்று அவரது தந்தை கூறினார்.

இந்நிலையில் அப்பாசி தான் திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். “குற்றத்தைச் செய்வதற்கு முன் நான் பல்வேறு கோணங்களில் செயலைப் பற்றி யோசித்தேன். அவர்கள் [அரசு] முஸ்லிம்களுக்கு எதிராக CAA மற்றும் NRC ஐ நடைமுறைப்படுத்தினர். கர்நாடகாவில் கூட முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. யாரும் பிரச்சினை பற்றி எதுவும் செய்யவில்லை. யாராவது ஏதாவது செய்ய வேண்டும். இப்படித்தான் என் மனதில் அந்தச் செயலை நியாயப்படுத்தினேன்,” என்று அப்பாசி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com