இனி ஒரு குழந்தையும் உயிரிழக்கக் கூடாது என்ற நோக்கோடு 63 குழந்தைகள் உயிரிழந்த கோரக்பூர் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வாங்க 15 வயது பள்ளி மாணவி ஒருவர் நிதி திரட்டி வருகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த குசி சந்த்ரா என்ற 15 வயது பள்ளி மாணவி, அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வாங்க நிதி திரட்டி வருகிறார். கோரக்பூர் அரசு மருத்துவமனையில், 63 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மூளை அலர்ஜி காரணமாக கூறப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை கொடுக்காததால், ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து குஷி சந்த்ரா, எனது சொந்த ஊரான கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்தது, என்னை பெரிதும் பாதித்துள்ளது. எந்தக் குழந்தைக்கும் வாழ்வதற்கான உரிமையை மறுக்க முடியாது. ஆனால் இங்கு குழந்தைகள் சுவாசிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாகவும், பொறுப்பாகவும் இருந்திருந்தால் குழந்தைகள் உயிரிழப்பை தடுத்திருக்கலாம். எனது நாட்டிற்கும், வசிக்கும் நகரத்திற்கும் ஒரு பொறுப்புள்ள குடிமகளாக இருக்க விரும்புகிறேன். அதில் எனக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க என்னால் அனுமதிக்க முடியாது. மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைப்பதற்கு அரசை எதிர்பார்க்காமல், இந்திய மக்கள் அனைவரும் முன்வந்து உதவ வேண்டும். கோரக்பூர் மருத்துவமனையில் இனி எப்போதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் உதவி செய்ய, என்னைப் போன்று சமூக நலனில் அக்கறை கொண்டவர்களை தேடி வருகிறேன் என்று குஷி கூறினார்.
ஆக்ஸிஜன் சப்ளை குறித்து வேலை நீக்கம் செய்யப்பட்ட கோரக்பூர் மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறும்போது, ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை உடனடியாக கொடுக்குமாறு நிர்வாகத்திற்கு நான் பல முறை கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் அவர்கள் நிதி வழங்கவில்லை என்று கூறியுள்ளார்.