கூகுள் இன்று தனது டூடுளாக பாபா ஆம்தேவின் 104வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. யார் இந்த பாபா ஆம்தே?
1914ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தவர் பாபா ஆம்தே. முர்ளிதர் தேவிதாஸ் ஆம்தே என்பதே இவரின் இயற்பெயர். பாசத்தின் காரணமாக மக்கள் இவரை பாபா ஆம்தே என்று அழைத்தனர். நிலக்கிழாரின் மகனாக பிறந்த இவர் இளம் வயதிலேயே கவிதை, இசை என அனைத்திலும் சிறந்து விளங்கினார். பின்னர் சட்டம் படித்த ஆம்தே, சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார். வழக்கறிஞர்களை ஒன்று திரட்டி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர்களுக்காக வாதாடினார். பின்னர் அவரும் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியின் மீது அதீத அன்புகொண்ட ஆம்தே காந்தியின் சேவாகிராம் ஆசிரமத்தில் சில காலம் தங்கினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
ஒருநாள் சாலையோரத்தில் தொழுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் வலியால் துடித்துக்கொண்டிருப்பதைக் கண்டார் ஆம்தே. அந்தக் காட்சி அவரை உலுக்கியது. அந்த மனிதனுக்கு உணவளித்து, மூங்கிலால் ஆன சிறிய குடிலையும் அமைத்துக் கொடுத்தார். அதன் பிறகு தனது வாழ்க்கையை அவர்களுக்கு சேவை செய்வதாக மாற்றிக்கொண்டார்.
முதலில் சிறிய அளவில் தொழுநோய்க் கண்டறிதல் மற்றும் சிகிச்சை மையத்தைத் தொடங்கிய ஆம்தே, பின்னர் வரோராவைச் சுற்றி 50 கி.மீ. சுற்றளவில் 11 தொழுநோய் சிகிச்சை மையங்களை உருவாக்கினார். தொழுநோயாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கையை துளிர்க்கச்செய்தார். பார்வையற்றோருக்கான பள்ளி, தொழுநோய் மருத்துவமனை, வேளாண் கல்லூரி, தொழு நோய் ஆய்வு மையம் என எளிய மக்களுக்கு உதவும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை செய்தார்.
கடைசி வரை மக்களுக்காகவே உழைத்த ஆம்தேவை தேடி பத்ம விபூஷன், காந்தி அமைதிப் பரிசு, மகசேசே உள்ளிட்ட ஏராளமான தேசிய, சர்வதேச விருதுகள் தேடி வந்தன. 2008-ம் ஆண்டு வயது மூப்பின் காரணமாக தன்னுடைய 94வது வயதில் பாபா ஆம்தே காலமானார்