அமெரிக்காவின் பாடகர் பி.பி கிங்கின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் கூகுள் தனது இணைய பக்கத்தில் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
பாடகர், பாடலாசிரியர், கிட்டாரிஸ்ட் என பன்முகங்களைக் கொண்ட பி.பி.கிங்கின் 94வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அவர் கடந்து வந்த பாதையை விளக்கும் வகையில் இரண்டு நிமிடம் பத்து விநாடிகளுக்கு வீடியோ ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.
1925ம் ஆண்டு அமெரிக்காவின் மிசிசிப்பியில் பி.கிங் பிறந்தார். சிறு வயது முதல் தேவாலயங்களில் பாடல் பாடி வந்த கிங், பின்னர் சாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்தி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். பின்னர் வானொலி நிலையைத்தில் வேலைக்குச் சேர்ந்த கிங், புகழ்பெற்ற பீல் ஸ்ட்ரீட்டில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதற்குப் பிறகே அவர் “பீல் ஸ்ட்ரீட் ப்ளூஸ் பாய்” என்று அழைக்கப்பட்டார். பின்னாளில் அது “பி.பி.” என்று சுருக்கப்பட்டது.
கிங், 15 கிராமி விருதுகளை வென்றுள்ளார். 1987ம் ஆண்டு கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. பல இசைப்பல்கலைக்கழங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களை கொடுத்து கவுரவித்துள்ளன. 2012ம் ஆண்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தன் கச்சேரியை அவர் நடத்தினார்.
கிங் தனது கிட்டார்களுடன் நாடு முழுவதும் பயணம் செய்தார். அவர் தன்னுடைய கிட்டாருக்கு 'லூசில்லே' என்று பெயரிட்டார். 2012ம் ஆண்டு கிங்கின் வாழ்க்கை குறித்த சிறப்பு ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இசையால் பலரையும் தன்வசப்படுத்திய கிங், 2015ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி காலமானார்.