மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்ற 4 நாட்களில், தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். துணை முதலமைச்சர் அஜித் பவாரும் பதவி விலகியுள்ளார்.
மகாராஷ்டிர அரசியலில் சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியான அக்டோபர் 24ஆம் தேதி முதல் இன்றுவரை அரசியல் அதிரடி திருப்பங்களுக்கு பஞ்சமே இல்லை. நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக ஆட்சியமைக்கலாம் என சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்த நிலையில், யாருமே நினைத்துப்பார்க்காத வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுவின் தலைவராக இருந்த அஜித் பவாரின் ஆதரவுடன் பாஜக கடந்த சனிக்கிழமை அதிகாலையில் ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதமைச்சரானார், அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றிருந்தார்.
பாஜக ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த விவகாரத்தில் மகாராஷ்டிர ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா கூட்டணி கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 3 நாட்கள் விசாரணைக்குப் பிறகு, சட்டப்பேரவையில் நாளைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பட்னாவிஸ்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்றும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.
162 எம்எல்ஏக்கள் தங்கள் பக்கம் இருப்பதாக சிவசேனா கூட்டணியினர் ஏற்கனவே கூறி வந்தநிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகவே, துணை முதலமைச்சர் பதவியில் இருந்து அஜித் பவார் திடீரென விலகினார். துணை முதலமைச்சரைத் தொடர்ந்து, ஃபட்னாவிசும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நான்கு நாட்களிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் பகத்விங் கோஷ்யாரியிடம் அளித்தார்.
இதற்கு முன்னதாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அஜித் பவாருடன் இருப்பதாகக் கருதியதால்தான் அவரது ஆதரவுடன் ஆட்சி அமைக்க முனைந்ததாகவும் தெரிவித்தார். சிவசேனா கூட்டணியின் ஆட்சி மகாராஷ்டிராவில் நீடிக்குமா என்பது குறித்து தற்போது கூற இயலாது என்று தெரிவித்த பட்னாவிஸ், பாரதிய ஜனதா பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு மக்களின் குரலை பேரவையில் எதிரொலிக்கும் என்றார். பாஜகவின் வியூகம் பலிக்காத நிலையில், மகாராஷ்டிராவில் மீண்டும் புதிய ஆட்சி விரைவில் மலர்கிறது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக எம்எல்ஏவான காளிதாஸ் கொலம்ப்கர் ஆளுநர் மாளிகையில் சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார். இவர் எம்.எல்.ஏக்களுக்கு நாளை பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்று தெரிகிறது. இதனையடுத்து, நாளை காலை 8 மணிக்கு சட்டசபையை கூட்ட ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.