திருப்பதி கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 19.16 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லுகின்றனர். அங்கு அவர்கள் செலுத்தும் காணிக்கைகள் என சுமார் 9800 டன் நகைகள் திருப்பதி கோயில் கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. மேலும் அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பதி கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 19.16 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநில பாஜக பொதுச்செயலாளர் பானுபிரகாஷ் கூறுகையில், வெள்ளி கிரீடம், தங்கம் மோதிரம், தங்கம் நெக்லஸ் காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் திருப்பதி தேவஸ்தானம் பதிலளிக்க வேண்டும் எனவும் காவல்துறையில் புகார் அளிக்காமல் ஒரு குறிப்பிட்ட நபர் மீது மட்டும் பழி சுமத்தி தப்பிப்பது நியாயமில்லை எனவும் குறிப்பிட்டார். இந்த திருட்டில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.