சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தடாலடியாக குறைந்துள்ளது. சவரனுக்கு 880 ரூபாய் குறைந்துள்ளதால், தங்க நகை வாங்கும் திட்டத்துடன் இருப்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எப்போதுமே ஏற்ற இறக்கத்தோடு இருந்து வரும் தங்கம் விலை, கடந்த மாதத்தின் இறுதியில் உச்சத்தை எட்டியது. தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று வரலாற்றிலேயே புதிய உச்சத்தைத் தொட்டு 59 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனையானது. இது நகை வாங்குபவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த மாதத்தின் துவக்கம் முதலே ஏற்ற இறக்கத்தைக் கண்டது. தங்கம், ரூபாய் மதிப்பு போன்றவை அமெரிக்க டாலர், பங்குச்சந்தையோடு தொடர்புடையதால், அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்குப் பிறகு தங்கம் விலை தடாலடியாக சரிந்தது. அந்த வகையில், கடந்த 13 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 4 ஆயிரத்து 160 ரூபாய் குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, கிராம் ஒன்றுக்கு 110 ரூபாய் குறைந்து 6,935 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 880 ரூபாய் குறைந்து 55 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பண்டிகை காலம் முடிந்ததால் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்குப் பிறகு நடக்கும் மாற்றங்களால் தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது.
அமெரிக்க டாலர் குறியீடு, கிரிப்டோகரன்சி மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளில் நடக்கும் ஏற்றம், பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை சரிந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போதைக்கு சரிவை சந்தித்தாலும், எதிர்வரும் நாட்களில் ட்ரம்ப் நிர்வாகப் பொறுப்பேற்று கொண்டு வரும் கொள்கைகளைப் பொறுத்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.