பல முதலீட்டுத் திட்டங்கள் இருந்தாலும் தங்கத்தை வாங்குவது என்றால் நம் மக்களுக்கு தனி விருப்பம்தான். அணிந்து அழகு பார்த்துக்கொள்வதற்கு மட்டுமல்ல.. அவசர பணத் தேவைக்கு அடகு வைக்கவும் உதவுவதால்தான் தங்கத்தின் மீது இந்தியர்களுக்கு இத்தனை பிரியம்.
மஞ்சள் உலோகத்தின் விலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவாக இருந்தது. தற்போது வரை அதன் விலையேற்ற விவரங்கள் என்ன.. என்பதை தெரிந்துகொள்வதில் எல்லோருக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது.
1980ஆம் ஆண்டில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? கேட்டால் ஆச்சரியமாக இருக்கும்.. வெறும் ஆயிரம் ரூபாய்தான். ஆண்டுகளுக்கு பிறகாக, 2004ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. 2008இல் 10 ஆயிரம் ரூபாய்க்கும், 2010இல் ஒரு சவரன் 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகியிருக்கிறது.
2011ஆம் ஆண்டில் 20 ஆயிரம் ரூபாயாக இருந்த தங்கம் விலை, 2019ஆம் ஆண்டில் 25 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தது. 2020ஆம்ஆண்டில் ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 2021ஆம் ஆண்டில் 40 ஆயிரம் ரூபாயாக விலை உயர்ந்தது.
இந்நிலையில், தற்போது தங்கம் வரலாறு காணாத விலை ஏற்றமாக ஒரு சவரன் 50 ஆயிரத்தை தொட்டுள்ளது. சமீபகாலமாகவே தங்கத்தின் விலை மிக வேகமாக அதிகரித்து வருவதை காணமுடியும். அதற்கு, சர்வதேச பொருளாதார நிகழ்வுகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் கடன் வட்டி விகிதங்கள் குறித்து வெளியாகும் தகவல்கள், ரஷ்யா - உக்ரைன் போர் நீடிப்பு, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கமே திரும்பியுள்ளது.
தங்கத்தில் முதலீடு செய்ய OLD ETF, GOLD BOND என பாதுகாப்பான திட்டங்கள் நிதிச்சந்தையில் கிடைக்கின்றன. ஆபரணத் தங்கத்தை பாதுகாப்பாக வைப்பதோடு, அதை பணமாக மாற்றும்போது சேதாரம் உள்ளிட்டவற்றை தவிர்க்க இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பது மற்றொரு பார்வையாக உள்ளது.