‘நான் "பூ " அல்ல "நெருப்பு ".. பிரதமர் அலுவலக கோட்சேக்களே..’ - எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி

‘நான் "பூ " அல்ல "நெருப்பு ".. பிரதமர் அலுவலக கோட்சேக்களே..’ - எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி
‘நான் "பூ " அல்ல  "நெருப்பு ".. பிரதமர் அலுவலக கோட்சேக்களே..’ - எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி
Published on

பிரதமர் அலுவலக கோட்சே பக்தர்களே என்னை கைது செய்ய திட்டமிட்டனர் என்று குஜராத் மாநில சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் குறித்த ட்வீட்டிற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் அசாம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தன்னை அழிக்கவும் அவதூறு செய்வதற்கும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதியாகும் என்று கூறினார். தெலுங்கு திரைப்படமான புஷ்பாவின் புகழ்பெற்ற வசனமான  நான் "பூ " அல்ல  "நெருப்பு "  என்ற வசனத்தை குறிப்பிட்டு எத்தகைய அழுத்தங்களுக்கும் நான் அடிபணிய மாட்டேன் என்றும் கூறினார்.



புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மேவானி , “நான் கைது செய்யப்பட்டதற்குப் பின்னணியில் பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் சில கோட்சே பக்தர்கள் உள்ளனர். குஜராத்தில் 22 முறை வினாத்தாள் கசிந்தது தொடர்பாக வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. முந்த்ரா துறைமுகத்தில் நடந்த மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் குறித்து எந்த விசாரணையும் இல்லை. குஜராத் அமைச்சருக்கு எதிராக ஒரு பட்டியலின பெண்ணால் சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் இல்லை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்ற சன்சாத் அமைப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

ஆனால் பிரதமர் குறித்த எனது ட்வீட் எளிமையானது. நான் பிரதமரிடம் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக வேண்டுகோள் விடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். அதற்காக என்னை கைது செய்தனர். அது எதைக் காட்டுகிறது, இது என்னை அழிக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி. எனது வழக்கு குறித்த எப்ஐஆரின் நகல் எனக்கு வழங்கப்படவில்லை, என் மீது போடப்பட்ட பிரிவுகள் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை. எனது வழக்கறிஞரிடம் பேச எனக்கு அனுமதி இல்லை, எம்.எல்.ஏ.வாக இருந்த எனது சிறப்புப் புறக்கணிக்கப்பட்டது. நான் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் சட்டசபை சபாநாயகருக்குத் தெரிவிக்கப்படவில்லை. இது குஜராத்தின் பெருமையை காயப்படுத்தியுள்ளது. இதற்காக குஜராத் அரசு வெட்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.



கடந்த செப்டம்பரில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, பிரதமர் குறித்து ட்வீட் செய்ததாக ஏப்ரல் 20 அன்று குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் இருந்து அசாம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏப்ரல் 25 அன்று மேவானிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால் உடனடியாக அவர் ஒரு புதிய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.  இரண்டாவது வழக்கில், அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டு, சனிக்கிழமை சிறையில் இருந்து வெளியே வந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com