தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை போலவே கர்நாடகத்திலும் குடும்பதலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் இருக்கிறது. அங்கே இத்திட்டத்திற்கு பெயர், “Gruha Lakshmi” (குடும்பத்தின் லட்சுமி என பொருள்படுகிறது). இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.2000 வழங்கப்படுகிறது.
காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளில் 5 முக்கிய திட்டங்களில் ஒன்றான இந்த Gruha Lakshmi திட்டமானது காங்கிரஸின் முன்னாள் தலைவரும் எம்.பி-யுமான ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரால் துவங்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.சி.யும், அக்கட்சியின் கர்நாடக ஊடகப் பிரிவு துணைத் தலைவருமான தினேஷ் கூலிகவுடா என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “சாமுண்டீஸ்வரி கோவில் கடவுளுக்கும் (அங்குள்ள பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரிக்கும்) மற்ற கர்நாடக பெண்களுக்கு கொடுப்பதை போலவே ரூ. 2000 வழங்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார் தினேஷ்.
இந்த வேண்டுகோளுக்கு உடனடியாக பதிலளித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கு ஒரு உத்தரவு போட்டிருக்கிறார். அதில், “உங்களின் துறையிலிருந்தோ அல்லது தனிப்பட்ட முறையிலோ சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு, இந்த Gruha Lakshmi திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ 2,000 டெபாசிட் செய்யவும்” என அறிவுறுத்தி உள்ளாராம் அவர். இதை தினேஷ் ஒரு ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
முன்னதாக இத்திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் வைத்து முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவக்குமார், ‘பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம் வெற்றி பெற’ என பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.