வழிநடத்துதல் விளக்கப்படம் இல்லாததால் பாங்காக் சென்று கொண்டிருந்த கோ ஏர்(GoAir) விமானம் மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
டெல்லியிலிருந்து 146 பயணிகளுடன் கோ ஏர் ஏ320 விமானம் பாங்காக்கிற்கு நேற்று காலை 7.15 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானம் விண்ணில் பறந்து கொண்டிருந்தப்போது விமானத்தில் வழிநடத்துதல் விளக்கப்படம் இல்லாததை விமானி கண்டுபிடித்தார். இதனைத்தொடர்ந்து சுதாரித்து கொண்ட விமானி விமானத்தை மீண்டும் திருப்பி டெல்லியை நோக்கி இயக்கியுள்ளார். இதனால் விமானம் மீண்டும் காலை 9.30 மணியளவில் டெல்லியில் தரையிறங்கியது. அங்குச் சென்று மீண்டும் விமானத்தின் வழிநடத்துதல் விளக்கப்படத்தை பெற்று விமானம் மீண்டும் இதே பயணிகளுடன் பாங்காக்கிற்கு மதியம் 12 மணிக்கு இயக்கப்பட்டது.
இது குறித்து கோ ஏர் விமானத்தின் செய்தித் தொடர்பாளர், “நேற்று டெல்லி-பாங்காக் விமானத்தில் வழிநடத்துதல் விளக்கப்படம் இல்லாததால் விமானம் புறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. ஏனென்றால் ‘கோ ஏர்’ நிறுவனத்திற்கு பயணிகளின் பாதுகாப்பே முக்கியம். எனவே தான் எங்கள் விமானி மீண்டும் டெல்லிக்கு திரும்பி வந்து இந்த விளக்கபடத்தை பெற்று சென்றார்.
எப்போதும் பாங்காக்கிற்கு செல்லும் விமானம் பராமரிப்பு பணிக்கு சென்றுள்ளதால் இந்த உள்ளூர் விமானம் பாங்காக்கிற்கு அனுப்பட்டது. ஆகவே தான் இந்த விமானத்தில் பாங்காக் செல்லும் வழி நடத்துதல் திட்டம் இல்லை. இந்த நிகழ்வால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.