விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு முதல்.. ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டம் வரை.. யார் இந்த ரிஹானா?

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட ரிஹானாவிற்கு இந்தியா வேறுஒரு வகையிலும் பரிட்சயம்.
rihanna
rihannapt web
Published on

அம்பானி வீட்டு விஷேசம்

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர், ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி துறை தவிர பிற வணிகங்களிலும் இயக்குநராக உள்ளார். இவருக்கும், தொழிலதிபரும் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான வீரேன் மெர்ச்சன்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை 12-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. மணப்பெண்ணான ராதிகா, ஆனந்த் அம்பானியுடன் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது திருமணம் முந்தைய கொண்டாட்ட நிகழ்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த கொண்டாட்டங்களில் திரைப் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர் வீராங்கனைகள் என பலர் கலந்துகொண்டனர்.

ரிஹானா

இதில் கவனிக்கத்தக்க வேண்டியவர் ரிஹானா. பாப் பாடகியான ரிஹானா பிப்ரவரி 29 ஆம் தேதி குஜராத்தில் உள்ள ஜாம்நகருக்கு வந்தார். அப்போதே, விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியேறும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சான்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வில் நிகழ்ச்சி நடத்துவதற்காக ரிஹானாவிற்கு 8 முதல் 9 மில்லியன் டாலர்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 66 கோடி முதல் ரூ.74 கோடிக்கும் அதிகம். ரிஹானா தனியார் நிகழ்ச்சிகளில் அத்துனை சீக்கிரம் கலந்துகொள்கிறவர் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நடந்த Super Bowl halftime show, ஆஸ்கர் விருது நிகழ்ச்சிகளில் ரிஹானா பாடி இருந்தாலும், 2016 ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட Anti World Tourக்கு பிறகு இசைக்கச்சேரிகளை நடத்தவில்லை. வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மட்டும் Bitch Better Have My Money, Work, Umbrella, Stay, All of the Lights, We Found Love, Diamonds, Where Have You Been, Rude Boy, Pour it Up உள்ளிட்ட 19 ஆல்பங்கள் பாடப்பட்டதாக கூறப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமாலின் சங்கீத் நிகழ்வில் அமெரிக்க பாடகியான பியோன்ஸ் நிகழ்ச்சி நடத்தினார். இவருக்கு அப்போதே கிட்டத்தட்ட 4 மில்லியன் டாலர்கள் இதற்காக கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.33 கோடி.

இந்நிலையில், திருமண நிகழ்விற்குப் பின் ரிஹான்னா அமெரிக்கா திரும்பினார். மார்ச் 1 அன்று, திருமண கொண்டாட்ட நிகழ்வில் தனது நிகழ்ச்சியை முடித்த ரிஹானா தனது தோழியுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் கலந்துகொண்டார். அதில் 2 நாட்களில் மீண்டும் அமெரிக்கா திரும்புவதற்கான காரணத்தை தெரிவித்தார். அவர் கூறுகையில், “இரண்டு நாட்களில் நான் மீண்டும் அமெரிக்கா திரும்புவதற்கான காரணம், என் குழந்தைகள் எனக்காக காத்திருப்பதால் தான்” என தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டமும் ரிஹானாவின் ட்வீட்டும்...

ரிஹானாவிற்கு இந்தியா வேறுஒரு வகையிலும் பரிட்சயம். கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்தான செய்திகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டதும், ரிஹானா அப்போதைய ட்விட்டர் செயலியில் பதிவொன்றை வெளியிட்டார். டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரியானா, "இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?" என்று #FarmersProtest என்ற ஹேஷ்டேக்குடன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு இந்திய பிரபலங்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இதன்பின்னர் அவர் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர், எந்த மதத்தைச் சேர்ந்தவர் என இணையத்தில் தேடி அதுகுறித்தான தரவுகளும் இணையத்தில் வைரலானது. பிரபலங்களின் ட்வீட் சண்டைகளுக்கு இடையே நெட்டிசன்களும் இணைய, இந்தியா உலகளவில் பேசுபொருளானது. விவசாயிகளுக்காக குரல் கொடுத்த ரிஹானாவைத்தான் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார் அம்பானி.

யார் இந்த ரிஹானா?

2003-ஆம் ஆண்டில் இசைத் தயாரிப்பாளர் இவான் ரோஜர்ஸ் மற்றும் கார்ல் ஸ்ட்ரூக்கன் ஆகியவர்கள் மூலம் பாடகியாக அறிமுகமானார் ரிஹானா. அவர் 15 வயதில் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். 'மியூசிக் ஆஃப் தி சன்' என்ற அவரது முதல் ஆல்பம் கடந்த 2005-ஆம் ஆண்டு டெஃப் ஜாம் கரங்களால் வெளியிடப்பட்டது. இருப்பினும் அது பெரிய அளவில் பேசப்படவில்லை. பின்னர் 2007-ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட 'குட் கேர்ள் கான் பேட்' (Good Girl Gone Bad) ஆல்பம்தான் அவருக்கு உரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது. அன்றுதான் ரியானா வெளியுலகிற்கு அறிமுகமாக தொடங்கினார். அம்ரல்லா ("Umbrella") என்ற பாடலுக்காக ரியானா தனது முதல் கிராமி விருதைப் பெற்றார்.

36 வயதான ரிஹானா தனது பாடல்கள் மூலம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார். ஒன்பது கிராமி விருதுகள், 13 அமெரிக்க இசை விருதுகள், 12 பில்போர்டு இசை விருதுகள் மற்றும் ஆறு கின்னஸ் உலக சாதனைகள் உட்பட பல விருதுகளை வென்று உலக அளவில் தனக்கான ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார். லண்டனின் O2 அரங்கில் 10 இசை நிகழ்ச்சிகளை நடத்திய முதல் பெண் தனி இசைக்கலைஞர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பாப் நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து பில்போர்டு ஹாட் 100 தரவரிசையில் 14 நம்பர் 1 ஹிட்ஸ்களை கொடுத்துள்ளார். இந்த தரவரிசையில் 31 டாப் 10 ஹிட்ஸ்களை கொடுத்து தனி முத்திரை பதித்துள்ளார்.

இசையைத் தவிர, ரியானா நடிப்பிலும் ஆர்வம் கொண்டவர். 2012 ஆம் ஆண்டு வெளியான பேட்டில்ஷிப் (Battleship) என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து வலேரியன் (Valerian) மற்றும் சிட்டி ஆஃப் எ தௌசண்ட் பிளனெட்ஸ் (the City of a Thousand Planets - 2017) மற்றும் ஓஷன்ஸ் 8 (Ocean's 8 - 2018) உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இது தவிர, தனது லாப நோக்கற்ற அமைப்பான கிளாரா லியோனல் பவுண்டேஷன் (சி.எல்.எஃப்) மூலம் அவர் மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் ரியானாவுக்கு 104 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் ஃபாலோயர்கள், 108.1 மில்லியன் எக்ஸ் தள ஃபாலோயர்கள் மற்றும் 152 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் இருக்கின்றனர். இசை, நடிப்பு, மனிதநேய பணிகளைக் கடந்து அவர் ஒரு தொழில்முனைவோராக Fenty Beauty எனப்படும் மேக்அப் பிராண்டின் இணை நிறுவனரும் ரியானாதான்.

சர்வதேச அளவிலான பிரச்னைகளை கவனிப்பதும், அதுகுறித்த தனது பார்வையைப் பதிவு செய்வதும் ரியானாவின் வழக்கம் என்பது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com