கொரோனாவுக்கு ஆன்டி வைரல் மருந்து தயாரித்த நிறுவனம் - மனிதர்களிடம் பரிசோதிக்க ஒப்புதல்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதற்கான ஆன்டி வைரல் மருந்தை Glen mark pharmaceutical நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அதை மனிதர்களிடம் அளித்து பரிசோதிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1074 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கிறார்கள்.
மத்திய அரசின் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற அனுமதியை பெற்றுள்ள முதல் நிறுவனம் கிளென்மார்க் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபவிப்ரவிர் என்ற இம்மருந்தை குறைந்த மற்றும் மிதமான பாதிப்பு கொண்ட கொரோனா நோயாளிகளிடம் செலுத்தி 28 நாட்கள் வரை சோதனைகள் நடைபெறும் .
இதில் மருந்தின் குணப்படுத்தும் திறன் தெரிந்துவிடும் என்றும் கிளென்மார்க் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு துணைத் தலைவர் சுஷ்ருத் குல்கர்னி தெரிவித்தார். கொரொனாவை குணப்படுத்துவதற்காக அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் தீவிரமாக ஆய்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.