பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்வில் இயற்பியல் வேதியியல் தேர்வில் தோல்வி அடைந்த பெண் மாணவி ஒருவர், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருக்கும் மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நீட் தேர்வு வேண்டாம் என ஒரு புறம் எதிர்ப்பு கிளம்பிய வண்ணம் உள்ளது. மறுபுறம் நீட் தேர்வு நடைபெற்று கொண்டு வந்தாலும், தேர்வில் முறைக்கேடு என பல்வேறு குளறுபடிகள் ஒவ்வொரு நீட் தேர்வு சமயத்திலும் பூதாகரமாக வெடித்து வருகிறது.
இந்தவகையில், அண்மையில் வெளியான நீட் தேர்வின் முடிவில் மாணவி ஒருவர் 720 க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார் என்ற மதிப்பெண் பட்டியல் சமூக வலைதளப்பக்கமான எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
மாணவி 705 மதிப்பெண் பெற்றதற்காக அல்ல, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இயற்பியல்,வேதியியல் ஆகிய பாடங்களில் தோல்வியை தழுவிய மாணவி இதில் மட்டும் வெற்றி பெற்றது எப்படி என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
வைரலாகி வரும் மாணவியின் மதிப்பெண் பட்டியலில், இயற்பியல் தேர்வில் 100க்கு 21 மதிப்பெண்ணும், இயற்பியல் செய்முறை தேர்வில் 50 க்கு 36 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.
மேலும், வேதியியல் செய்முறை தேர்வில் 50க்கு 33 மதிப்பெண்ணும், வேதியியல் பாடத்தில் 100 க்கு 31 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே, நீட் தேர்வு முடிவில், 99.861% வேதியியல் பாடத்திலும், 99.8903% இயற்பியல் பாடத்திலும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பகிரப்பட்டு வரும் இந்த மதிப்பெண் பட்டியலின் உண்மை தன்மையை ஆராய்வதற்காக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று தேசிய சோதனை முகாமை நாடியுள்ளது. ஆனால், இது குறித்து தற்போதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று கூறியுள்ளது.
முன்னதாக, நீட் தேர்வில் பல புகார்கள் எழுந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 67 மாணவர்கள் முதலிடம் பிடித்திருந்தது, 6 மாணவர்கள் முழு மதிப்பெண்களைப் பெற்றிருந்தது, வினாத்தாள் கசிவு தொடர்பான பல்வேறு புகார்கள் பெறப்பட்டன.
எனவே, வரும் ஜூன் 23-ஆம் தேதி, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1563 பேருக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும், ஜீன் 30 ஆம் தேதி இதன் முடிவுகள் வெளியாகும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழலில், மீண்டும் ஒரு குளறுபடியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.