7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் திருவிழாவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. 3ஆம் கட்டமாக மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாஜக எம்பியும் முன்னாள் மல்யுத்த தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் கைசர்கஞ்ச் தொகுதியும் ஒன்று. இந்தத் தொகுதிக்கு ஐந்தாவது கட்டமாக மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இத்தொகுதியின் பாஜக சிட்டிங் எம்பியும் முன்னாள் மல்யுத்த தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு அக்கட்சி மீண்டும் சீட் தரவில்லை. அவருக்குப் பதிலாக அவரது மகன் கரண் பூஷன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ஆறு முறை எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக, முன்னணி மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தனர். அத்துடன் கடந்த ஆண்டு ஜனவரி முதல் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது, நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. தொடர்ந்து வீரர்கள் தாம் வாங்கிய பதக்கங்களை மத்திய அரசிடம் திருப்பி அளித்தனர். சாக்ஷி மாலிக்கோ, மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாகவே அவருக்கு சீட் வழங்க பாஜக மறுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.