ஷெசல்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக ஓய்வு பெற்ற ராணுவ தளபதி தல்பீர் சிங் சுகாக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராணவ தளபதியாக 2014ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி தல்பீர் சிங் சுகாக் பொறுப்பேற்றார். இவர் ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற போதே எதிர்ப்பு நிலவியது. அவரது நியமனத்திற்கு எதிராக லெப்டினன் ஜெனரல் ரவி தஸ்டனே உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
ஆனால், நீதிமன்றம் நியமனத்திற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. அதனையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அந்த ராணுவ தளபதி பொறுப்பில் இவர் இருந்தார். பின்னர், 2016ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தல்பீர் சிங் ஓய்வு பெற்றார். இவர் ராணுவ தளபதியாக இருந்த நேரத்தில்தான் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஓய்வு பெற்ற பின்னர் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக செய்திகள் வெளியாகின. இந்த மாத தொடக்கத்தில் கூட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் தல்பீர் சிங் சுகாக் பாஜகவில் இணைந்துவிட்டதாக செய்திகள் வலம் வந்தன. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்தச் செய்தியும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஷெசல்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக தல்பீர் சிங் சுகாக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தூதரக பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.