கவுரி லங்கேஷின் கொலையை அரசியல் ஆக்க வேண்டாம் - சகோதரர் இந்திரஜித் வேண்டுகோள்

கவுரி லங்கேஷின் கொலையை அரசியல் ஆக்க வேண்டாம் - சகோதரர் இந்திரஜித் வேண்டுகோள்
கவுரி லங்கேஷின் கொலையை அரசியல் ஆக்க வேண்டாம் - சகோதரர் இந்திரஜித் வேண்டுகோள்
Published on

கவுரி லங்கேஷின் கொலையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும், இந்த வழக்கில் நீதியை மட்டுமே தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவரது சகோதரர் இந்திரஜித் கூறியுள்ளார். 

எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு தொடர்பாக ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். கர்நாடக முதலமைச்சர் சித்தாராமைய்யா, எழுத்தாளர் கவுரி லங்கேஷூக்கு ஏன் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பாதுகாப்பு அளிப்பதில் தோல்வியடைந்து விட்டதாகவும் விமர்சித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, எழுத்தாளர் கவுரி லங்கேஷ் பாதுகாப்பு கோரியிருந்தால் அளிக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

அதேவேளையில், இந்த கொலைக்கும் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் தொடர்பிருப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய கவுரி லங்கேஷின் சகோதரர் இந்திரஜித், கவுரி கொலையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இந்த வழக்கில் நீதியை மட்டுமே தாங்கள் எதிர்ப்பார்ப்பதாகவும் இந்திரஜித் கூறினார்.

முன்னதாக, விசாரணை நடத்தும் சிறப்புப் புலனாய்வு குழுவினரிடம் ஆலோசனை நடத்திய கர்நாடக முதலமைச்சர் சித்தாராமைய்யா, குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். விசாரணைக்காக கூடுதல் அதிகாரிகளை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த கொலை தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. வலதுசாரிகளை கடுமையாக விமர்சித்து வந்த கவுரி லங்கேஷ் அவரது வீட்டில் கடந்த 5ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com