கொரோனா பொதுமுடக்கத்துக்கு முன்பாக இந்தியா வந்த மெரினா என்பவர், மும்பை சாகிநாகா பகுதியிலுள்ள சாலையில் உடலில் காயங்களுடன் கிடந்துள்ளார். கணபதி பந்தலை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு ரஷ்ய தூதரகம் மூலமாக குடும்பத்துடன் இணைத்துள்ளனர்.
மெரினா என்ற 35 வயது ரஷ்ய பெண் மூளை நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் சாலையோரம் உடலில் காயங்களுடன் கிடப்பதை பார்த்த கெரானிஷா ராஜா கணபதி பந்தல் நிர்வாகிகள் இவரை மீட்டுள்ளனர், ஆனால் தன்னை அடையாளம் சொல்ல முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார் மெரினா. அதன்பிறகு ரஷ்ய தூதரகத்தை தொடர்புகொண்ட அவர்கள் இவர்பற்றிய தகவலை தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி தெரிவிக்கும் கெரானிஷா ராஜா பந்தல் நிர்வாகி பிரசாந்த் மவுரியா “ ஆகஸ்டு 7 ஆம் தேதி அந்த பெண்ணை மீட்டெடுக்கும்போது மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அதன்பிறகு அவரை எங்கள் அலுவலகத்துக்கு அழைத்துசென்று சிகிச்சைகொடுத்த பிறகு, ரஷ்ய மொழிபெயர்ப்பாளர் மூலமாக அவரிடம் பேசினோம். அப்போதுதான் அவர் ஹடிங்டன் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் இவரது புகைப்படத்தை வெளியிட்டு இவரது குடும்பத்தை தேடினோம்,ரஷ்ய தூதரகமும் இவரது புகைப்படத்தை கொண்டு ரஷ்யாவில் தேடினார்கள் அப்போதுதான் இவர் ரஷ்யாவின் பொவாய் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தது” என்கிறார்
இப்போது மெரினாவின் குடும்பத்தினர் பற்றிய விபரமும் தெரியவந்துள்ளது. மெரினா தனது 7 வயது மகனைப்பற்றி அதிகம் பேசுகிறார். கோவாவிலிருந்து ரஷ்யாவுக்கு முதல் விமானசேவை தொடங்கும்போது மெரினா பாதுகாப்பாக ரஷ்யாவுக்கு அனுப்பப்படுவார் என்று ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.