செந்தில் பாலாஜி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற காரசார விவாதத்தின் முழு விவரம்!

அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
உச்சநீதிமன்றம், செந்தில்பாலாஜி
உச்சநீதிமன்றம், செந்தில்பாலாஜிகோப்புப் படம்
Published on

விசாரணைக்கு வந்த செந்தில் பாலாஜி வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் கைதுக்கு எதிராக செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை இரண்டாவது நாளாக இன்று (ஜூலை 27) உச்சநீதிமன்ற நீதிபதிகள் போப்பன்னா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

செந்தில் பாலாஜி தரப்பு கபில் சிபல் வாதங்களை முன்வைத்துக் கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”ஏற்கெனவே நீதிபதி ராமசுப்பிரமணியம் அமர்வில் முன்வைத்த வாதங்களை செந்தில் பாலாஜி தரப்பு மீண்டும் முன்வைக்கிறது; அதை ஏற்கக் கூடாது” என வலியுறுத்தினார்.

 செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை மீண்டும் கேவியட் மனு
செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை மீண்டும் கேவியட் மனு

செந்தில் பாலாஜி தரப்பு வைத்த வாதம்

இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு, “இது சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு எதிரான வழக்கு. இதில் எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கக்கூடாது என அமலாக்கத்துறை கூறக்கூடாது” என பதில் அளித்தது. இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு தொடர்ந்து வாதங்களை முன்வைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கினர். தொடர்ந்து கபில் சிபல் வாதங்களை வைத்தார். அவர், “இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 167 அமல்படுத்தப்பட்டுவிட்டது. அப்படியெனில், வேறு எந்த நடைமுறையும் இதற்குமேல் இருக்க முடியாது. ஏனெனில் கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். அவ்வாறு ஆஜர்படுத்திய பின்னர் காவல் தொடர்பான முடிவை நீதிமன்றம்தான் எடுக்கும். மேலும் கைது செய்யப்பட்ட 15 நாட்கள் வரை மட்டுமே போலீஸ் காவலை அனுமதிக்க முடியும்” என்றார்.

செந்தில் பாலாஜி தரப்பிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஒருவரை ஒரு விசாரணை அமைப்பு எதற்காக கைது செய்கிறது? அவரிடம் இருந்து மேலும் அதிகமான புலனாய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்கீழ் முதலில் பணம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய வேண்டும். அதற்குப் பிறகும் விசாரணை நடத்த வேண்டும் என்று தோன்றினால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டம் பிரிவு 19இன் கீழ் ஒருவர் குற்றம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறையின் இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர் அல்லது கைது செய்வதற்கு அதிகாரம் கொண்ட அதிகாரி கைது செய்ய முடியும்தானே?” என கேள்வி எழுப்பினர்.

கபில் சிபல்
கபில் சிபல்file image

மேலும் அவர்கள், “சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு விதிகளின் கீழ் அமலாக்கத் துறைக்கு என உள்ள அதிகாரத்தை யாரும் மறுக்க முடியாது. விசாரணை செய்யவும் கைது செய்யவும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் விதிகள் வழிவகை செய்துள்ளன” என்றனர் நீதிபதிகள்.

அதற்குப் பதிலளித்த கபில் சிபல், ”புலனாய்வு மற்றும் விசாரணை தவறாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. செந்தில் பாலாஜி இந்த வழக்கில் ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம்; அது வேறு பிரச்னை. இந்த விவகாரத்தில் சட்டவிதிகள் தவறாகப் பயன்படுத்தபட்டுள்ளது என்பதைத்தான் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்

எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த துஷார் மேத்தா, ”அரசியல் வாதங்களை முன்வைக்காமல், தரவுகள் அடிப்படையில் வாதிட வேண்டும். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டப்பிரிவின்கீழ், தவறான கைதுக்காக ஓர் அதிகாரிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கலாம்” என்றார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிpt web

“அப்படியெனில், இதுவரை அவ்வாறு எத்தனை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், தண்டனை பெற்றுள்ளனர்” என கபில் சிபல் வினவினார். மேலும் “FERA மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு காவல்துறைக்கான அதிகாரமே வழங்கப்படாதபோது அல்லது அதிகாரம் இல்லாதபோது அவர்கள் எந்தச் சட்டவிதியின் அடிப்படையில் ஒருவரை தங்களது காவலில் வைத்து விசாரிக்க வேண்டும்; கோர முடியும்” என்றார்.

ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

இதைத்தொடர்ந்து இன்றைய அலுவல் நேரம் நிறைவடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும் ஒரு மணி நேரத்தில் செந்தில் பாலாஜி தரப்பு தங்களது வாதங்களை நிறைவுசெய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “எனக்கு வாதங்களை முன்வைக்க இரண்டு மணி நேரம் வேண்டும்” என்று கூறினார். அவர் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com