மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய முழுஅடைப்பு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவுடன் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. முழு அடைப்பு காரணமாக திருப்பதியில் பேருந்துகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதியடைந்தனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழுஅடைப்பு நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மத்திய பாஜகவுடன் நெருக்கமாக உள்ள ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விசாகப்பட்டினம் எஃகு ஆலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்க்கும் அதே நேரத்தில் இன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாய சங்கங்களுக்கு ஆதரவாகவும், விசாகப்பட்டினம் எஃகு ஆலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளது.
ஆந்திர மக்களின் உரிமை மற்றும் லட்சக்கணக்கான தெலுங்கு மக்களின் விருப்பத்திற்கு மாறாக விசாகாப்பட்டினம் ஸ்டீல் ஆலையை தனியார் மயமாக்க விடமாட்டோம். ஏனெனில் மாநிலத்தில் எஃகு ஆலை நிறுவுவதற்கு, தெலுங்கு மக்கள் மாபெரும் தியாகங்களை செய்துள்ளனர். எனவே, பொதுமக்களுக்கு இடையூறின்றி அமைதியான முறையில் முழு அடைப்புப் போராட்டத்தை விவசாயி சங்கங்களுடன் இணைந்து ஒய்எஸ்ஆர் கட்சி பந்தில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் முழு அடைப்பு போராட்டம் நடத்ததையொட்டி மதியம் 1 மணிக்கு பிறகே அனைத்து அரசு பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் பேருந்துகள் அனைத்து அந்தந்த பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை இடையே வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் தமிழகம் ஆந்திரா இடையே போக்குவரத்து இல்லாமல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் திருப்பதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து இருக்கின்றனர். இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.