பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 9 ஆவது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை 31 காசுகளும், டீசல் விலை 21 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 79.55 காசுகளுக்கு விற்கப்பட்டது. சென்னையில் இதுவே அதிகபட்ச பெட்ரோல் விலையாகும். அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 71 ரூபாய் 55 காசாக குறைந்தது. தொடர்ந்து இறங்கு முகத்தில் காணப்பட்ட பெட்ரோல் விலை 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் 61 ரூபாய் 46 காசாகவும், 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் 63 ரூபாய் 2 காசாகவும் விற்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கர்நாடக தேர்தலின் போது தொடர்ந்து 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட வில்லை. அப்போது பெட்ரோல் விலை ரூ77.77 ஆகவும், டீசல் விலை ரூ70.02 ஆகவும் இருந்தது. மே 16 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. தினசரி பெட்ரோல் விலை சுமார் 30 காசுகளும், டீசல் விலை 25 காசுகளும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ80.11 காசாக இருந்தது. அது இன்று காலை 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ80.42 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலை 21 காசு உயர்ந்து ஒரு லிட்டர் ரூ 72.35 காசுக்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் புதிய உச்சத்தை எட்டியுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கடந்த 9 நாட்களில் மட்டும் பெடோர்ல் விலை 2 ரூபாய் 65 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 33 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நிரந்தரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.