சூழ்நிலை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் கனவுகள் நனவாகும். அதற்கு மிஸ் இந்தியா 2020ல் ரன்னராக வந்த மன்யா சிங் ஒரு சிறந்த உதாரணம். ஆம், ஆட்டோ ஓட்டுநரின் மகளான மான்யா சிங், உத்தரபிரதேசம் கோரக்பூரைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஆட்டோ ஓட்டி கொண்டுவரும் பணத்தாலேயே குடும்பம் நடைபெற்று வந்தது.
இதுபோக மன்யா சிங் பகல் நேரங்களில் பள்ளி சென்று படித்தும், மாலை நேரங்களில் பாத்திரம் தேய்த்தும், இரவு நேரங்களில் கால் சென்டரில் வேலை பார்த்தும் பணம் சம்பாதித்துள்ளார். ஒரு காலத்தில் இரவு சாப்பிடாமல் கூட தூங்கியுள்ளார். தனது குழந்தை பருவத்தில் ஏராளமான கஷ்டங்களை கடந்து வந்துள்ளார் மன்யா சிங். மன்யாவின் தந்தை வீட்டை நடத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டார். நிதி நெருக்கடி காரணமாக மன்யா சிங்கால் மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை முறையான கல்வியைப் பெற முடியவில்லை.
இதுகுறித்து மன்யா சிங் கூறுகையில், “நான் 14 வயதிலிருந்தே வேலை செய்ய ஆரம்பித்தேன். நான் பிஸ்ஸா ஹட்டில் வேலை செய்தேன். நான் பாத்திரம் கழுவும் வேலை செய்துள்ளேன். ஒருவரின் காலணிகளை சுத்தம் செய்ய வேண்டிய நாட்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
கட்டணம் செலுத்த முடியாததால் என்னை தங்கள் பள்ளியில் படிக்க அனுமதிக்குமாறு எனது பெற்றோர் எனது பள்ளி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர். அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக் கட்டணத்தை மட்டுமே செலுத்த முடியும். பத்தாம் வகுப்பு வரை எனது ஆரம்பக் கல்வியை இப்படித்தான் முடித்தேன். என் கல்லூரி கட்டணத்தை செலுத்த என் அம்மா தனது வெள்ளி கொலுசை விற்க வேண்டியிருந்தது.
கால் சென்டரில் பணிபுரியும் போது எப்படி பேசுவது என்று கற்றுக்கொள்ள விரும்பினேன். எனது மொழியை மேம்படுத்தவும் எனது நம்பிக்கையை அதிகரிக்கவும் விரும்பினேன். நான் என் குடும்பத் தேவைக்காக வேலை செய்துகொண்டே கல்லூரியில் பட்டம் பெற்றேன்” எனத் தெரிவித்தார்.
இறுதியாக வாழ்க்கையில் வெற்ற பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை உலகிற்கு காட்டவே மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றதாக மான்யா சிங் கூறியுள்ளார்.