செய்தியாளர் - ரவிக்குமார்
மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு பிறகு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய மோடி, ஒரு தலைவரை சுட்டிக்காட்டி, சிலிர்த்து சிலாகிக்கிறார். அவரது பெயரின் பொருளே 'புயல்' என்று புகழ்கிறார். கரவொலிகள் அரங்கை நிறைக்கின்றன. மோடி பிரமித்த, அந்தத் தலைவரின் பெயர்
பவன் கல்யாண் என்ற பெயருக்கே ஃப்ளாஷ் பேக் இருக்கிறது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, மார்ஷியல் ஆர்ட்ஸ் வல்லவரான தனது தம்பி கல்யாணை நடிகராக்கினார். அறிமுக விழாவில், தற்காப்புக் கலைகளை அரங்கேற்றி வியக்க வைத்தார் கல்யாண். இதை பார்த்து மெய்சிலிர்த்த பார்வையாளர்கள் கொடுத்த பட்டம்தான் 'பவன்'. பவன் என்பது வாயுபுத்திரன் அனுமனின் செல்லப்பெயர்.
பவன் கல்யாணின் படங்கள் வெளியாகும் திரையரங்குகளில் தீபாவளிதான். அவர் திரையில் தோன்றினாலே விசில் பறக்கும்; பாக்ஸ் ஆபிஸ் கொழிக்கும்; ஆக்ஷன் காட்சிகளில் 'ஆறடி புல்லட்'டாக தெறிப்பார். இவர் பங்கேற்காத தெலுங்கு திரை விழாக்களில் கூட, பவன் கல்யாண் என்ற பெயரைச் சொன்னாலே ஆர்ப்பரிக்கும் அரங்கம்.
2008ல் அண்ணன் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் கட்சியைத் தொடங்கியபோது, அதன் இளைஞரணியான யுவராஜ்யத்தின் தலைவர் ஆனார் பவன் கல்யாண். ஆனால், கட்சியை காங்கிரசுடன் இணைத்தபோது, சிரஞ்சீவியை எதிர்த்தார்; உடன்பிறப்புகளுக்கு இடையே ஊடல் வந்தது.
2014ல் ஜனசேனா கட்சியைத் தொடங்கினார். அந்த ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. 2019 தேர்தலில் இடதுசாரிகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். கஜூவாக்கா - பீமாவரம் என 2 தொகுதிகளில் களமிறங்கிய பவன் கல்யாண், இரண்டிலுமே தோல்வியை தழுவினார். ரஜோலு என்ற ஒரு இடத்தில் மட்டுமே வென்றது ஜனசேனா.
முதல் வெற்றியை ருசித்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை பவனுக்கு. வெற்றி பெற்ற அந்த எம்.எல்.ஏ. ரபகா வரப்பிரசாத் ராவ், YSR காங்கிரசுக்கு தாவிவிட்டார். ஆனாலும் சோர்ந்து போகவில்லை பவன் கல்யாண். 'ஜனவாணி' என்ற பெயரில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டார். தொடர்ந்து பொதுக்கூட்டங்களை நடத்தினார். மக்களுக்கான போராட்டங்களை நடத்தினார். ஜெகன் அரசுக்கு குடைச்சலாக மாறினார். வழக்குகள் போடுவது, கைது செய்வது, விடுவிப்பது என்றே இருந்தது ஜெகன் அரசு.
2023 ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைதானபோது பொங்கி எழுந்துவிட்டார் பவன் கல்யாண். கடும் கண்டனங்களை பதிவு செய்த பவன், ஆந்திராவை ஹைடெக் மாநிலமாக நிர்மாணித்தவருக்கான மரியாதை இதுதானா என சீறினார். நாயுடுவைச் சந்திக்க ராஜமுந்திரி சிறைக்கு சென்றபோது, காவல்துறை வழிமறித்தபோது, திரும்பிப் போக மறுத்தார். ரோட்டில் அமர்ந்தும் படுத்தும் போராடினார்.
அதன் பிறகே, சிறையில் நிகழ்ந்தது நாயுடு - பவன் சந்திப்பு. அந்த சந்திப்பு, ஆந்திர அரசியலில் திருப்புமுனையானது. அப்போதுதான் மலர்ந்தது, தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா என்ற வெற்றிக் கூட்டணி. கூட்டணிக்கு அஸ்திவாரம் போட்டது மட்டுமின்றி, ஜெ.பி.நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங் என பாஜக உயர்மட்டத் தலைவர்களை மீண்டும் மீண்டும் சந்தித்து, உறுதிப்படுத்தி வலுப்படுத்தினார் பவன் கல்யாண். ராணுவ வாகனம் போன்ற பிரம்மாண்டமான தோற்றமுள்ள 'வாராஹி' என்ற வாகனத்தில் மாநிலம் முழுவதும் யாத்திரை சென்றார்.
21 பேரவைத் தொகுதிகளிலும், 2 மக்களவைத் தொகுதிகளிலும் களம் கண்டது ஜனசேனா. பிதாபுரம் தொகுதியில் பவன் போட்டியிட்டார். ஜெகன் வீசிய அஸ்திரங்கள் அத்தனைனையும் வீழ்த்தி, 70,279 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் பவன். களமிறங்கிய அத்தனை இடங்களிலும் வெற்றி பெற்று நூற்றுக்கு நூறு சதவிகித வெற்றியை, திகட்டத் திகட்ட பரிசளித்துள்ளனர் ஆந்திர மக்கள்.
3 ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உறுதுணையாக இருப்பது தெலுங்கு தேசம் கட்சி. இந்தக் கூட்டணிக்கு விதை போட்டு, வெற்றியை அறுவடை செய்ய வைத்திருப்பது பவன் கல்யாண். கட்சி தொடங்கி 10 ஆண்டு கால காத்திருப்பில், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைக்க அடிப்படையாக இருக்கும் அளவுக்கு உச்சம் தொட்டுள்ளார் பவர்ஸ்டார் பவன்!