பாஜக சார்பில் போட்டியிடுகிறாரா தோனி? - கசியும் தகவல்கள்

பாஜக சார்பில் போட்டியிடுகிறாரா தோனி? - கசியும் தகவல்கள்
பாஜக சார்பில் போட்டியிடுகிறாரா தோனி? - கசியும் தகவல்கள்
Published on

2019 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே கவுதம் காம்பீர் பெயர் அடிபட்டு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக தோனியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற தொகுதியில் பாஜக எம்.பியாக இருப்பவர் மீனாட்சி லெக்வி. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வரும் நிலையில், மீனாட்சி லெக்வியை மீண்டும் களமிறக்க பாஜக தயக்கம் காட்டி வருகிறது. ஏனெனில், அவர் மீது தொகுதியில் நல்ல அபிப்ராயாம் இல்லை. அதனால், அந்தத் தொகுதியில் டெல்லியைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான காம்பீரை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. 

டெல்லியைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் சண்டே கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இத்தகையை கருத்தினை தெரிவித்துள்ளார். கவுதம் காம்பீர் தன்னுடைய சமூக பணிகளுக்காக மக்களால் பாராட்டுக்களை பெற்றவர். அவர் நிச்சயம் டெல்லி மக்களுக்கு பணியாற்ற பொருத்தமான நபர் என்றும் அந்த பாஜக தலைவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான தோனியும் பாஜக சார்பில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் தோனியை தங்களது அணியில் சேர்ப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று பாஜக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். ‘தோனியும், காம்பீரும் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் இரு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் அல்ல நாட்டிற்கே தலைவர்களாக இருப்பார்கள். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருப்பதால் தென்னிந்தியாவில் அது பலனைக் கொடுக்கும். இரண்டு வீரர்களும் எங்கள் கட்சியில் இணைவது எங்களுக்கு மிகப்பெரிய சொத்தாக அமையும்’ என்று கூறினார். 

மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ‘சம்பார்க் ஃபார் சமர்தன்’ (சந்தித்து ஆதரவு திரட்டுங்கள்) என்ற திட்டத்தை பாஜக வகுத்துள்ளது. அதன்படி, பாஜக தலைமை 50 முக்கிய பிரபலங்களை சந்தித்து மோடி அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்ட வேண்டும் என்ற திட்டத்தையும் அக்கட்சி உருவாக்கியுள்ளது. அதன்படி, பல்வேறு முக்கிய பிரபலங்களை அமித்ஷா சந்தித்து வருகிறார். அந்த வரிசையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மகேந்திர சிங் தோனியையும் அமித்ஷா சந்தித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வையும் அவர் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com