மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த வருடம் (2023) தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர்.
கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர்.
இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த வன்முறை, ஓராண்டைக் கடந்தும், இன்றளவும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலை, மணிப்பூர் மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவின் தோல்விச் சின்னமாகவே பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளும் இதுகுறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. முன்னதாக, கடந்த மாத தொடக்கத்தில், இருதரப்புக்கு இடையே இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அமைதி காத்த நிலையில், அம்மாநில முதல்வர் பைரேன் சிங், இன்னும் 6 மாதங்களில் முழுமையாக அமைதி திரும்பும் என உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் மணிப்பூரில் நேற்று வன்முறை வெடித்துள்ளது. மணிப்பூரின் மேற்கு இம்பால் நகரில் கவுடிரக் பகுதியில் குக்கி இனத்தவர்களில் சிலர், உயர் தொழில்நுட்பம் வாய்ந்த ஆளில்லா விமானங்களின் உதவியுடன் எறிகுண்டுகளை வீசினர். துப்பாக்கிச்சூடும் நடத்தினர். நேற்று மதியம் 2 மணியளவில் தொடங்கிய இந்த தாக்குதல் இரவு 7.30 மணி வரை நீடித்துள்ளது. அந்த பகுதியில் தொடர்ந்து இரவு முழுவதும் பதற்ற நிலையே காணப்பட்டது.
இந்த எதிர்பாராத தாக்குதலில் சிக்கி பெண் ஒருவர் உள்பட 2 பேர் பலியானார்கள். செய்தி சேகரிக்க சென்ற நிருபர், காவல் பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசார் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் கிராமத்தில் இருந்த வீடுகள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து அப்பகுதியில் மத்திய மற்றும் மாநில அரசு படைகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளது.