போக்சோ-வில் சர்ச்சை தீர்ப்புகள்: ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதியாக முடியாத நீதிபதி புஷ்பா!

போக்சோ-வில் சர்ச்சை தீர்ப்புகள்: ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதியாக முடியாத நீதிபதி புஷ்பா!
போக்சோ-வில் சர்ச்சை தீர்ப்புகள்: ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதியாக முடியாத நீதிபதி புஷ்பா!
Published on

அண்மையில் போக்சோ வழக்குகளில் சர்ச்சை தீர்ப்புகள் வழங்கிய நீதிபதி புஷ்பாவால், மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக முடியவில்லை. அதேநேரத்தில், கூடுதல் நீதிபதியாகவே அடுத்த ஓர் ஆண்டுக்கு அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை உயர்நீதிமன்றம் நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக இருப்பவர் புஷ்பா கெனாடிவாலா. இவர் அண்மையில் போக்சோ வழக்கு ஒன்றில் கொடுத்த தீர்ப்பு மிகவும் சர்ச்சைக்குள்ளானது. ஆடைக்கு மேல் தீண்டுவது போக்சோவின் கீழ் வராது எனக்கூறி குற்றவாளியை அதிலிருந்து விடுவித்தார். இதையடுத்து உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது.

இதேபோன்று அதற்கு முன்பாக இரண்டு போக்சோ வழக்குகளிலும் சர்ச்சை தீர்ப்புகளை வழங்கியுள்ளார் புஷ்பா. இவ்விவகாரம் மக்கள் மத்தியில் பூதாகரமானது. இதையடுத்து புஷ்பா கெனாடிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப்பெற்றது.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதல் நீதிபதியாகவே புஷ்பா தொடர வேண்டும் என்ற பரிந்துரையையும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் முன்வைத்தது.

இந்நிலையில், புஷ்பா கெனாடிவாலாவின் பதவிக் காலம் நேற்றோடு முடிவடைந்தது. தொடர்ந்து புஷ்பா கெனாடிவாலா நிரந்தர நீதிபதியாக மாற்றப்படாமல் மேலும் ஓராண்டு காலம் கூடுதல் நீதிபதியாகவே தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற கொலீஜியம் இரண்டு ஆண்டுகளுக்கு புஷ்பா கூடுதல் நீதிபதியாக தொடரலாம் என பரிந்துரைத்த நிலையில், ஓராண்டு மட்டும் பதவிக் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பது கவனத்துக்குரியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com