இந்திய சுதந்திரத்திற்காக நம் வரலாற்றில் பலர் பாடுபட்டுள்ளனர். இருப்பினும் ஒரு சிலரின் பெயர்கள் மட்டுமே வரலாற்று புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பலரின் தியாகங்கள் நமக்கு தெரியவருவதில்லை. அரசாங்கம் தியாகிகளை கண்டறிந்து அவர்களுக்கு சில சலுகைகளை வழங்கி அவர்களை பெருமைப்படுத்துகிறது. ஆனால் அவர்கள் செய்த தியாகங்களுக்கு முன்னால் இது எதுவுமே பெரிதில்லைதான்.
இன்னொருபக்கம் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து எழுபத்தாறு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் சுதந்திரப்போராட்ட வீரர்களின் பங்களிப்புகள் நம் பலரின் நினைவிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவருகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் முக்கிய தலைவர்கள் மட்டுமல்லாது பல தனிநபர்கள் பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதில் முக்கியமாக திகழ்ந்த பல தியாகிகளின் பெயர்கள் வரலாற்று புத்தகங்களில் இடம்பெறாதது துரதிஷ்டவசமானது. இப்படிப்பட்ட தியாகிகளில், ஒருவரை இன்று நாம் பார்க்கலாம்.
1901- தக்வானில் (அசம்கர் மாவட்டம்) ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் சைஃபுதீன். இவரது தந்தை இமாம் அலி ரங்கூனில் ஒரு கேண்டீனில் பணிபுரிந்தவர். இளவயது முதல் சைஃபுதீனுக்கு எப்படியாவது பிரிட்டிஷ் இராணுவத்தில் சேரவேண்டும் என்ற ஆசை இருந்தது. தனது 20-வது வயதில் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறி கப்பல் மூலம் கொல்கத்தா வந்து இறங்கியுள்ளார். பிறகு அங்கு, இங்கு என்று அலைந்த அவர், ஒருகட்டத்தில் நினைத்தபடி பிரிட்டிஷ் இராணுவத்திலும் இணைந்து விட்டார்.
பிரிட்டிஷ் ராணுவத்தினர் தங்களுக்கு உணவு எடுத்து வர இந்தியர்களை கொத்தடிமைகளாக பயன்படுத்தியதும், தங்களை உணவு மூட்டைகளை எடுத்து வரவைத்ததும் சைஃபுதீனுக்கு பிடிக்கவில்லை. மனிதாபினமற்ற ஆங்கிலேயரின் செயலை கண்டு வெதும்பிய அவர், இந்தியர்களுக்கு எதிரான அவர்களின் சதி திட்டத்தையும் தெரிந்துகொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து தனது கைத்துப்பாக்கியால் ஒரு அதிகாரியை சுட்டுவிட்டு சிங்கப்பூருக்கு தப்பிச்சென்று இருக்கிறார்.
சிங்கப்பூரில் சுபாஷ் சந்திரபோஸை சந்தித்த சைஃபுதீன் அவரின்மேல் கொண்ட பற்றால் இந்திய தேசிய இராணுவத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். அங்கு சைஃபுதீன் என்ற தனது பெயரை நிஜாமுதீன் என்று மாற்றிக்கொண்டார். நாளடைவில் சுபாஷ் சந்திரபோஸுக்கு ஒரு நம்பகமான உதவியாளராகவும் இருந்துள்ளார். ஒரு சமயம் நேதாஜிக்கு மலாயா மன்னர் பரிசளித்த காரில் தனது உயிரை பணையம் வைத்து முக்கிய தலைவர்களை ஏற்றிச்சென்று உதவியுள்ளார்.
1943ல் நேதாஜி சிங்கப்பூரில் ஐஎன்ஏவின் தலைமைப் பொறுப்பை ஏற்றதும், நிஜாமுதீனும் அவருடன் இணைந்து பிரிட்டிஷ் இராணுவத்திற்கு எதிராக போராட சென்றார். காடுகள் புதர்களை கடந்து இருவரும் செல்லும் வழியில், புதர்களின் நடுவே துப்பாக்கிக் குழல் ஒன்று நேதாஜியை குறிபார்த்து இருப்பதைக் கவனித்த நிஜாமுதீன் துணிச்சலாக நேதாஜியின் முன் பாய்ந்து, அவரின் உயிரைக் காப்பாற்ற மூன்று தோட்டாக்களை தனது உடல்களில் எடுத்துக்கொண்டுள்ளார்.
இந்த திடீர் சம்பவத்தை கண்டு பதறிய நேதாஜி நிஜாமுதீன் உயிரை காப்பாற்ற கேப்டன் லட்சுமி சேகல் உதவியை நாடியுள்ளார். அவர்தான் நிஜாமுதீன் உடலில் உள்ள தோட்டாக்களை அகற்றி அவரின் உயிரை காப்பாற்றியிருக்கிறார். இந்த நிகழ்வுக்கு பிறகு இந்திய தேசிய ராணுவத்தில் நிஜாமுதீன் கர்னல் என்ற பட்டத்தைப் பெற்றார். உடலில் காயம் இருந்தபோதிலும் அவர் வியட்நாம், தாய்லாந்து, ஜப்பான் மற்றும் மலேசியா முழுவதும் பயணங்களில் நேதாஜியுடன் தொடர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளார்.
1945 ல் சுபாஷ் சந்திரபோஸ் மறைவிற்கு பிறகு ஐ.என்.ஏ கலைக்கப்பட்டது, பிறகு நிஜாமுதீன் அஜ்புன் நிஷா என்ற பெண்ணை மணந்து ரங்கூனில் டிரைவராகப் பணியாற்றினார். பிறகு 1969ல் தனது குடும்பத்துடன் இந்தியாவில் உள்ள ஹிந்த்பவன் என்ற தனது சொந்த கிராமத்தில் குடியேறினார்.
நேதாஜியின் வாழ்த்துகளுக்கு பெயர் பெற்ற நிஜாமுதீன் நீண்ட ஆண்டுகளுக்கு ஆரோக்கியமாக வாழ்ந்து பிப்ரவரி 6, 2017 அன்று தனது 112 வயதில் காலமானார்.