மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமான இலவச பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில் பல்வேறு இடங்களுக்குச் செல்ல இலவச பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இலவச பேருந்து ஒன்று திருப்பதியில் உள்ள தேவஸ்தான பணிமனையில் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் திருமலைக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது வாகனம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் மற்றும் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து பேருந்தை ஒட்டி வந்த ஓட்டுனர் அளித்த தகவலை அடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
டீசல் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.