போலி சாதிச் சான்றிதழ்கள் மூலம் அரசுப் பணிபெற்றவர்கள் விரைவில் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், போலியான சாதிச் சான்றிதழ்கள் மூலம் அரசின் துறைகளில் வேலைவாய்ப்புப் பெற்றவர்கள் மீது சீரான கால இடைவெளியில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அதேபோல, அரசு ஊழியர் ஒருவர் போலியான சாதிச் சான்றிதழ் மூலம் வேலை பெற்றிருந்தால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார். இதுதொடர்பாக கடந்த மார்ச் 29ல் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்திருந்த அமைச்சர் ஜிதேந்திரசிங், அரசின் பல்வேறு துறைகளில் 1,832 பேர் போலியான சாதிச் சான்றிதழ்கள் மூலமாக வேலைவாய்ப்பு பெற்றிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அவற்றில், 1,296 பேர் நிதியமைச்சகத்தின் கீழ்வரும் துறைகளில் பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.